சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவை நடிக்கவைப்பதற்கு பல இயக்குநர்களும் முயற்சி செய்துவந்த நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தவர், தற்போது ‘மாம்பழ திருடி’ என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
இதுகுறித்து அப்பட இயக்குநர் ஏ.ஆர்.ரசீம் கூறுகையில், “இந்தப் படத்தில் நடிக்கும்படி சத்யநாராயண ராவை அணுகியபோது பல இயக்குநர்களிடமும் கூறியதுபோலவே எனது படத்திலும் நடிக்க விரும்பவில்லை என்று சொன்னார்.
ஆனால், முதலில் என் கதையைக் கேளுங்கள், பிடித்திருந்தால் நடியுங்கள் என்று கூறி கதையைச் சொன்னதும் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தில் நடிப்பதற்கு அவருக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து நான் நடிக்க வைத்துள்ளதாகச் சொல்கின்றனர். அதெல்லாம் பொய். அவர் பணம் ஏதும் வாங்கவில்லை. உண்மையில் அவர்தான் எங்களுக்காகச் செலவு செய்தார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்த கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் ரஜினியின் அண்ணன் நடித்திருப்பதை கடவுள் கொடுத்த வரம், பரிசாகவே கருதுகிறேன் என்றார்.
ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் நடிப்பதன் காரணமாக இந்தப் படம் நிச்சயம் ஓடும் என்று நான் நினைக்கவில்லை. படத்தின் கதை கண்டிப்பாக பார்வையாளர்களைக் கட்டிப்போடும் அளவுக்கு இருக்கும் என்பதால் இப்படம் வெற்றிபெறும் எனும் நம்பிக்கை எனக்குள்ளது,” என்று இயக்குநர் ஏ.ஆர்.ரசீம் கூறியுள்ளார்.
தம்பி பற்றி அண்ணன்
“தம்பி ரஜினியிடம் எனக்குப் பிடித்ததே அவர் கொடுக்கும் மரியாதைதான். சின்ன வயது முதல் சூப்பர் ஸ்டார் ஆனபின்பும் என் மீது வைத்துள்ள அன்பும் மரியாதையும் அப்படியேதான் உள்ளது. பழசை மறக்காதவர் ரஜினி. என்னிடம் மட்டுமில்லை, எல்லாரிடமும் அப்படித்தான் நடந்துகொள்வார். அன்பு, கருணை, பாசம், நேசம்னு அவர் மாதிரியான மனது யாருக்கும் வராது. அப்படிப்பட்ட என் தம்பி எங்கள் குடும்பத்தில் வந்து பிறந்தது நாங்கள் செய்த பெரிய பாக்கியம்.
தம்பியின் படத்தில் மிகவும் பிடித்தது ‘அண்ணாமலை’தான். அதற்கடுத்து, ‘படையப்பா’. உழைத்தால் எல்லோரும் முன்னேறலாம் எனும் உத்வேகத்தைக் கொடுக்கும் படங்கள். அதனால், மிகவும் பிடிக்கும்,” என்கிறார் சத்யநாராயண ராவ்.

