தமிழ்த் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக விளங்குபவர் பிரியா பவானி சங்கர். நடிகர் அருள்நிதியின் ஜோடியாக ‘டிமான்டி காலனி 2’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவர உள்ளது.
“நான் நான்கு வெற்றிபெற்ற படங்களில் நடித்துள்ளேன். அது எனக்கு அதிர்ஷ்டத்தால் வரவில்லை, திறமையினால் வந்தது,” எனக் கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.
‘மேயாத மான்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான பிரியா பவானி, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘யானை’ உள்ளிட்ட 20க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார். அத்துடன், சென்னையில் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்கள் வெற்றிபெறாத நிலையில், பிரியா பவானி சங்கர் நடித்தாலே அந்தப் படம் தேறாது என சமூக ஊடகங்களில் தொடர்ந்து ‘மீம்ஸ்’ போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் வருத்தமாகப் பேசியுள்ள பிரியா பவானி, “சிரித்துக்கொண்டே ஒருவரைத் திட்டுவது எப்படியென இன்னமும் எனக்குப் புரியவில்லை. இந்த உலகத்தில் அழகில்லாதவர்கள், அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் என ஒருவரும் இல்லை. துளியளவாவது அனைவருக்கும் அதிர்ஷ்டம், அழகு இருக்கும்.
படங்கள் வெற்றிபெறவில்லை எனில் ஒரு நாயகனைப் பார்த்து யாராவது அதிர்ஷ்டமில்லாதவர் என கேலி, கிண்டல் செய்வார்களா? இது ஆணாதிக்க மனோபாவத்தைக் காட்டுகிறது.
ஒருவரை அதிர்ஷ்டமில்லாதவர் என்று கூறும்போது அவருடைய பெற்றோர் எந்தளவுக்கு வருத்தமடைவார்கள் என யோசித்துப் பேசவேண்டும். எனது பெற்றோரை நினைத்து நான் கவலைப்பட்டேன்,” எனக் கூறியுள்ளார்.