திரையுலகில் கவர்ச்சி காட்டாமல் திறமையால் சாதித்த நடிகைகள்

3 mins read
30324e63-d09c-4f20-b921-c296c4e9d19e
நடிகை சாய் பல்லவி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

தென்னிந்தியத் திரையுலகில் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. கவர்ச்சியாக நடித்தால்தான் இந்தக் காலத்தில் திரையுலகில் நீடித்து நிலைத்து நிற்கமுடியும் என சில நடிகைகள் நம்பும் நிலையில், துளியும் கவர்ச்சி காட்டாமல் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து அவர் அசரடித்து வருகிறார்.

இவர் இதுவரை ஆறுமுறை ‘ஃபிலிம்ஃபேர்’ விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.

‘பிரேமம்’ மலையாளப் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்ற பெயர் கிடைத்ததைத் தொடர்ந்து தமிழ்ப் படத்திலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.

தற்போது, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘அமரன்’ படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மும்பையில் இப்படத்தின் ‘டப்பிங்’ பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் சாய் பல்லவி பகிர்ந்திருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள ‘அமரன்’ படம், ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து நாக சைதன்யா ஜோடியாக ‘தண்டேல்’ படத்தில் சாய்பல்லவி நடித்து வருகிறார்.

பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் மூன்று பாகங்களாக உருவாகும் ராமாயணம் சம்மந்தப்பட்ட படத்தில் ராமன் வேடத்தில் ரன்பீர் கபூரும் சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர்.

படத்தை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கும் சாய் பல்லவி, படத்தின் கதை பிடிக்கவில்லையென்றால் அதை ஒதுக்குவதற்கும் தயங்குவதில்லை.

மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு மருத்துவப் பட்டம் பெற்ற சாய் பல்லவி, தனது நடிப்பால் மட்டுமின்றி, தனது நடனத்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி முகம் சுழிக்க வைக்காமல் நவநாகரிகமான தோற்றத்துடன் நடித்து இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கும் சில நடிகைகள் பற்றி பார்ப்போம்.

நதியா: 80களில் ‘பூவே பூச்சூடவா’ படம் மூலம் பிரபலமான நதியாவுக்குச் சிறந்த நடிகைக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது. துளியும் கவர்ச்சி காட்டாமல் திரையுலகில் சாதித்த நடிகைகளில் நதியாவும் ஒருவர்.

சங்கீதா: ‘இதயவாசல்’ படம் மூலம் அறிமுகமான சங்கீதா, நடிகர் விஜய்யின் ‘பூவே உனக்காக’ படத்தில் நடித்திருந்தார். இப்போதும் பல ரசிகர்களால் ரசிக்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள இவர், பெரும்பாலும் குடும்பப் பாங்கான பாத்திரங்களையே தேர்வு செய்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.

சுவலட்சுமி: தமிழில் அஜித்துக்கு ஜோடியாக ‘ஆசை’ படத்தில் நடித்து, முதல் படத்திலேயே பல இளம் ரசிகர்களின் இதயங்களைத் திருடியவர் நடிகை சுவலட்சுமி. 40 படங்களில் மட்டுமே சுவலட்சுமி நடித்திருந்தாலும் அதில் பெரும்பாலான படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தன. வெளிநாட்டைச் சேர்ந்த மருத்துவரைத் திருமணம் செய்துகொண்டார்.

சுஹாசினி: கமல்ஹாசனின் அண்ணன் மகளான சுஹாசினி தன்னுடைய இளம் வயதிலேயே நடிக்கத் துவங்கியவர். பல படங்களில் நாயகியாக நடித்திருந்தாலும், துளியும் கவர்ச்சி காட்டாத நடிகை எனப் பெயரெடுத்தவர். திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என பன்முகத் திறமையை வெளிப்படுத்தியவர் சுஹாசினி.

ரேவதி: திரையுலகில் கவர்ச்சி காட்டாத நடிகை எனக் கூறியதும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது நடிகை ரேவதியின் முகம்தான். ‘மண்வாசனை’ படம் முதல் இதுவரை முகம் சுழிக்கும் வகையில் உடைகளைக்கூட அணியாத நடிகை எனப் பெயர் எடுத்தவர்.

தேவயானி: தனது முதல் படமான ‘தொட்டா சிணுங்கி’ படத்தில் கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தாலும் இப்படத்தைத் தொடர்ந்து அவர் அஜித், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த போதிலும், துளியும் கவர்ச்சி காட்டாமல் நடித்தவர்.

நடிகை ஷாலினி: விஜய்க்கு ஜோடியாக காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி. நான்கு தமிழ்ப் படத்தில் நடித்திருந்தாலும் ஒரு படத்தில் கூட கவர்ச்சி காட்டவில்லை. நடிகர் அஜித்தை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வருகிறார் ஷாலினி.

குறிப்புச் சொற்கள்