பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படம் இந்திய தேசிய தினத்தன்று வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) திரைக்கு வருகிறது.
இந்தப் படத்தை பிரபலப்படுத்தும்விதமாக ஞாயிற்றுக்கிழமை நடிகர் விக்ரம், நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் மதுரையில் ரசிகர்களைச் சந்தித்தனர்.
அப்போது, ஒரு செய்தியாளர், “நடிகர்கள் அஜித், சூர்யாவுக்கு உள்ள அளவிற்கு உங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இல்லையே?” என விக்ரமிடம் நேரடியாகக் கேட்டார்.
இதைக் கேட்ட விக்ரம், “எனது ரசிகர்கள் பட்டாளம் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. திரையரங்கில் வந்து பாருங்கள். அனைத்து மக்களும் எதோ ஒரு வகையில் எனது ரசிகர்கள்தான். நானும் ‘தூள்’, ‘சாமி’ போன்ற படங்களைக் கொடுத்தவன்தான். முதல் மூன்று இடங்களைப் பிடிப்பதில் எல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை. நான் சினிமாவை நேசிக்கிறேன், வர்த்தகப் படங்களில் அதிகம் ஆர்வம் காட்டாமல், வித்தியாசமான கதைக்களம் உள்ள திரைப்படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்,” என்றார்.
இதைக்கேட்ட விக்ரம் ரசிகர்கள் உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பின் அதே செய்தியாளரிடம் விக்ரம் “நீங்கள் யாருடைய ரசிகர்?” என்று கேட்டதற்கு, “எனக்குப் பிடித்த நாயகன் அப்பா, பிடித்த நாயகி அம்மா,” என்று அவர் சாமர்த்தியமாகப் பதிலளித்தார்.
அதற்கு விக்ரம் “நீங்கள் நன்றாக நடிக்கிறீர்கள். பார்த்தீங்களா உங்கள் மனைவி பெயரைச் சொல்லவில்லை,” என்று கூற, அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று தெரிந்தவுடன், இதனால்தான் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறீர்கள் என்று நகைச்சுவையாகச் சிரித்துக் கொண்டே செய்தியாளரைக் கட்டிப்பிடித்தார்.
இந்தக் காணொளி தற்பொழுது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

