தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என்னை நானே செதுக்கிக் கொண்டேன்: அவந்திகா மிஸ்ரா

3 mins read
4326fb55-c309-4604-ac87-4232a2e1486b
நடிகை அவந்திகா மிஸ்ரா. - படம்: ஊடகம்

எனது படங்களுக்குக் கிடைத்து வரும் வரவேற்பு அளவில்லாத ஆனந்தத்தைக் கொடுத்துள்ளது. நடிகர் அஜித் பாணியில் சொல்வதாக இருந்தால், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெறுவதற்காக என்னை நானே செதுக்கிக்கொண்டேன் என்று சொல்கிறார் நடிகை அவந்திகா மிஸ்ரா.

சில சமயங்களில் நமது குடும்பப் பின்னணியைப் பார்த்து வாய்ப்புகள் குவியும். சில சமயங்களில் நமது திறமையைப் பார்த்து வாய்ப்புகள் வரும்.

பின்புலம் இல்லையெனில் திரையுலகில் வெற்றிபெறுவது கடினம். எங்கள் குடும்பத்துக்கும் திரையுலகுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. சுயமாக எனது முயற்சியில்தான் திரையுலகில் அடியெடுத்து வைத்து ஒவ்வொரு படியாக முன்னேறி வருகிறேன் என்கிறார் அவர்.

சென்னையில்தான் ‘மாடலிங்’ செய்ய ஆரம்பித்தேன். திரையுலகம் எனது இரண்டாவது வீடு மாதிரி என்று சொல்லும் அவந்திகா, நடிப்பது மட்டுமன்றி பயணங்கள் செல்வது, விளையாட்டுகளில் ஈடுபடுவது என எப்போதும் பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறார்.

இவரை சமூக ஊடகங்கள் வழி பல லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இராணுவக் குடும்பத்திலிருந்து தெலுங்குத் திரையுலகில் அறிமுகமான அவந்திகா மிஸ்ரா, தமிழில் ‘டி பிளாக்’, ‘என்ன சொல்லப் போகிறாய்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழக வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், “குடும்பப் பின்னணி இல்லையெனில் நல்ல வாய்ப்பை பெறுவதற்காக கடினமாக உழைக்கவேண்டிய சூழ்நிலை வரும். பிரபல இயக்குநர்களை அணுகும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிட்டாது.

அதையும் மீறி என்னைத் தேடி வாய்ப்புகள் வருகின்றன எனில் அதற்கு கடவுளின் கடைக்கண் பார்வைதான் காரணம்,” என்கிறார் அவந்திகா.

அசோக் செல்வன் நடிக்கும் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தில் தாதியாக நடித்துள்ளேன். அதிரடி, திகிலூட்டும் கதைகள் என ஒரே மாதிரியான வேடங்களில் நடித்து வந்த நான், இந்தப் படவாய்ப்பின் மூலம் வித்தியாசமான பாத்திரத்தை ரசித்துச் செய்தேன்.

தாதியாக நடிப்பதற்காக ஒரு மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள தாதிகளுடன் பழகி, அவர்களுடைய பணி, நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் முறை குறித்து தெரிந்துகொண்டேன். அது எனது வேடத்தை மேலும் சிறப்பாகச் செய்வதற்கு உதவியது.

நடிகர் அசோக் செல்வன் எப்போதும் எளிமையாக இருப்பார். சக நடிகர்களிடம் ஜாலியாகப் பழகுவார். படத்தின் வெற்றிக்காக கடினமாக உழைத்துள்ளார் என்கிறார் அவந்திகா.

தமிழ் ரசிகர்கள் அன்பானவர்கள். நமது நடிப்பு சிறப்பாக இருந்தால் மனம் திறந்து பாராட்டுவார்கள் என்று கூறுபவர், தமிழ், தெலுங்கு, இந்தி என எல்லா மொழிகளிலும் திறமையான நடிகைகளுக்கு முக்கியத்துவம் இருப்பதாகச் சொல்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சினிமா வேறு, இப்போதுள்ள சினிமா வேறு. இப்போது வித்தியாசமான படங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. ரசிகர்கள் மிகவும் புத்திசாலிகள், அவர்களுக்குப் புதிது புதிதாக கதைகளைத் தரவேண்டும் என்று கூறும் அளவுக்கு திரையுலகம் வளர்ந்துள்ளது. இயக்குநர்களும் அதைப் புரிந்துகொண்டு படங்களைத் தயாரிக்கிறார்கள்.

ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான் ஆகியோர் பின்புலம் இன்றி சினிமாவுக்கு வந்தவர்கள். பெரிய வெற்றியைப் பார்த்தவர்கள். மிக உயர்ந்த இடத்துக்குப் போனாலும் எளிமையாக உள்ளனர். சினிமாவில் அவர்கள் பார்க்காத வெற்றி இல்லை.

சில சமயங்களில் எனது திரையுலகப் பயணத்தை நினைக்கும்போது அச்சமாக இருக்கும். அப்போது இந்த ஜாம்பவான்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வேன். சவால்கள் தரும் கடினமான பணிகளில் அச்சம் மெல்ல மெல்ல குறைவதை உணர்வேன் என்கிறார் அவந்திகா மிஸ்ரா.

நடிகை அவந்திகா மிஸ்ரா. படம்: ஊடகம்

குறிப்புச் சொற்கள்