பாலிவுட்டின் பிரபல ஜோடியான ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனுக்கு கடந்த 2007ல் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு பதின்ம வயதில் ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அபிஷேக், ஐஸ்வர்யா பிரிந்துவிட்டதாக அடிக்கடி செய்திகள் வெளிவருவதும் அடங்குவதுமாக இருக்கின்றன.
அண்மையில், அம்பானி வீட்டுத் திருமண விழாவில் தனது மகளுடன் வந்து ஐஸ்வர்யா கலந்துகொண்டதால் மீண்டும் பிரிவு வதந்தி தலைதூக்கியது.
இந்நிலையில், இதற்குப் பதிலளித்துள்ளார் அபிஷேக் பச்சன். “உங்களுக்குப் பொழுதுபோகவேண்டும் என்பதற்காக உப்புச் சப்பற்ற விஷயத்தை எல்லாம் ஊதிப் பெரிதாக்குகிறீர்கள். பரவாயில்லை, நாங்கள் பிரபலங்கள் என்பதால் அதையும் ஏற்றுக் கொள்கிறோம்.
ஆனால், ஒன்றைக் கூற விரும்புகிறேன். எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை. நான் இப்போதும் திருமணமானவன்தான்,” என்று கூறியுள்ளார்.