சிறு வயதில் நான் ஒரு திடல் தட வீராங்கனையாக இருந்தபோது பி.டி உஷாதான் என் முன்மாதிரியாக உத்வேகம் அளித்து வந்தார். அதனால், பி.டி உஷாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்று நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.
‘பட்டம் போல்’ என்ற மலையாளப் படத்தில் அறிமுகமான மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர்.
நடிகர் தனுஷ் நடித்த ‘மாறன்’ படத்திலும் நடித்திருந்தார். தற்போது ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.
அவரது ரசிகர்களுள் ஒருவர், உங்களுக்கு யாருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையுள்ளது என்று கேட்டிருக்கிறார்.
அதற்குப் பதிலளித்த மாளவிகா மோகனன், “எனக்கு பி.டி. உஷாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கவேண்டும் என நீண்டநாளாகவே ஆசையுள்ளது. சிறு வயதில் நான் ஒரு திடல் தட வீராங்கனையாக இருந்தேன். அப்போது அவர்தான் எனக்கு உத்வேகம் அளித்தார்,” என்று பதிலளித்துள்ளார்.
அதன்பிறகு மற்றொரு ரசிகர் நடிகர் சூர்யா குறித்து கூறும்படி கேட்டதற்கு, “நடிகர் சூர்யா மிகவும் இனிமையானவர். அவரது கண்கள் அழகாக பல பாவனைகளையும் வெளிப்படுத்தக் கூடியவை. விரைவில் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அவரது நடிப்பில் வெளிவரும் ‘கங்குவா’ படம் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்,” என்று மாளவிகா கூறியிருக்கிறார்.
‘தங்கலான்’ படத்தில் ஆர்த்தி என்ற சவாலான பாத்திரத்தில் நடித்துள்ள மாளவிகா மோகனன், தான் நடிக்கும் பாத்திரத்திற்காக ஒப்பனைக்கு மட்டுமே தினமும் நான்கு மணி நேரத்தைச் செலவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
அவ்வளவு மெனக்கெட்டு ஒப்பனை செய்துகொண்டு நடிப்பது என்பது மிகவும் சிரமம். படத்தின் சண்டைக் காட்சிகளுக்காகச் சிலம்பம் சுற்றும் காட்சிகள் அதிகமாக மீண்டும் மீண்டும் எடுக்கப்பட்ட காரணத்தினால் எனது கையில் வீக்கம் ஏற்பட்டது.
இந்தப் படத்தில் படம் முழுக்க மேலாடை இல்லாமல் நடித்துள்ளேன் என்றும் கூறியுள்ளார் மாளவிகா.
பொதுவாகவே படப்பிடிப்பின்போது தாங்கள் பயன்படுத்திய வண்ண ஆடைகள், தோற்றத்தை ஓரளவுக்கு வெளிப்படுத்தும் வகையில், தாங்கள் நடித்துள்ள பட நிகழ்வுகளுக்கு ஆடைகளை அணிந்து செல்வதை பாலிவுட் திரையுலகில் பின்பற்றி வருகின்றனர்.
அந்த பாலிவுட் பாணியை மாளவிகா மோகனனும் ‘தங்கலான்’ நிகழ்வில் கடைப்பிடித்தார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு ‘தங்கலான்’ படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்வில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வந்திருந்த மாளவிகா மோகனன், செய்தியாளர்களிடம் பேசியபோது, “தனிப்பட்ட முறையில் மதுரை மாநகரை மிகவும் பிடிக்கும்.
இந்தியாவிலேயே மிகச்சிறந்த உணவு வகைகள் மதுரையில் தான் கிடைக்கும். கறிதோசை, ஜிகர்தண்டா என இங்குள்ள உணவு வகைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையான உணவு வகைகளைச் சுவைக்கவேண்டும் எனில் மதுரைக்குத்தான் வரவேண்டும்,” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.