பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்திருக்கும் ‘கொட்டுக்காளி’ படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.
இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், வெற்றி மாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு படம் பற்றி பாராட்டிப் பேசியுள்ளனர்.
விழாவில் பேசிய இயக்குநர் லிங்குசாமி, ‘கொட்டுக்காளி’ படம் பார்த்துவிட்டு அடுத்த நாள் காலையில் அலுவலகத்துக்கு வந்ததும் எல்லோரும் தூங்கவே இல்லை என்று சொன்னார்கள். இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்கும்போது ‘சத்தம் போடாதீர்கள்’ என்று சொல்வதற்கு நல்ல ரசிகர்கள் இருப்பார்கள் என்றார்.
மேடையேறிய இயக்குநர் மிஷ்கின், “என்னிடம் பலர் வந்து உதவி இயக்குநராக சேரவேண்டும் என்று கேட்பார்கள். அவர்களிடம் ஏன் சினிமாவுக்கு வருகிறீர்கள் எனக் கேட்டால் ‘வாழ்க்கையில் சாதிக்கவேண்டும்’ என்று சொல்வார்கள். அந்தக் கேள்வியை வினோத் ராஜிடம் கேட்டால், ‘என் கதை மூலமாக உலகத்தை மாற்றவேண்டும்’ என்று சொல்வார்.
இந்தப் படத்தில் இசையமைப்பாளரே கிடையாது என்றும் சொன்னார். இதுகுறித்து எனது உதவி இயக்குநர்களிடம் திட்டித் தீர்த்தேன். அதன்பிறகு இந்தப் படத்தைப் பார்த்தபோது, என்னை வினோத் ராஜ் ஓங்கி அறைந்ததுபோல் உணர்ந்தேன்.
என் தாயின் கருவறை இந்தப் படம். நான் வினோத் ராஜ் பாதத்தில் முத்தமிடுகிறேன். இதற்கு முன்பு இளையராஜா காலில் முத்தமிட்டிருக்கேன்,” எனப் பேசி கைத்தட்டல்களால் அரங்கை நிரம்பச் செய்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய சூரி, “தேனி, பொள்ளாச்சி என்று சுற்றிக்கொண்டு இருந்த என்னை வெளிநாடுகளுக்கு இந்தப் படத்தின் மூலமாக கூட்டிப் போயுள்ளனர். நான் வெளிநாட்டில் இருக்கும்போது என் அம்மா என்னை கைப்பேசியில் அழைத்து, ‘முட்டி வலிக்குது, கோடாலி தைலம் இருந்தால் வாங்கிட்டு வாப்பு. வெளியில் போனால் ரோட்டில் பஸ் வருதா என பார்த்து போ’ என்று சொன்னார்கள். அவர்களுக்கு வெளிநாடு பற்றி தெரிந்தது இந்த விஷயங்கள்தான்,” என்றார்.
இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் தளத்தில், “கொட்டுக்காளி படைப்பைத் தயாரித்த சிவகார்த்திகேயன், நடித்த சூரி, குழுவினருக்கு கோடி நன்றிகள்,” என்று பாராட்டிப் பதிவிட்டிருக்கிறார்.