இந்தியாவின் முதல் பெண் பிரதமர் மறைந்த இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் ‘எமர்ஜென்சி’.
கங்கணா ரனாவத் இயக்கி, நடித்துள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாகக் கொண்டு இப்படம் தயாராகியுள்ளது.
ஜவஹர்லால் நேருவின் மரணத்துக்குப் பின்னர் நாட்டின் பிரதமராக 1966ல் இந்திரா காந்தி பதவியேற்றது முதல் தொடங்குகிறது முன்னோட்டக் காட்சி. நேருவிடமிருந்து இந்திரா காந்தி நாற்காலியைப் பறித்தார் என்ற வசனங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
வாஜ்பாயைச் சந்தித்து இந்திரா காந்தி பேசியது குறித்தும் அவரைப் பாராட்டியது குறித்தும் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 10வது பிரதமராக விளங்கியவர் வாஜ்பாய்.
இறுதியில் ‘இந்தியாதான் இந்திரா, இந்திராதான் இந்தியா’ என்ற வசனத்துடன் முன்னோட்டக்காட்சி முடிவடைகிறது. இப்படம் செப்டம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

