‘தங்கலான்’ படத்திற்கு குவியும் பாராட்டுகள்

2 mins read
7419205e-381b-4e75-886b-e1451de601ee
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான படம் ‘தங்கலான்’ - படம்: ‘தங்கலான்’ படக்குழு

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான படம் ‘தங்கலான்’. அது ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. 

இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித்  ரசிகர்களுடன் இணைந்து படத்தை திரையரங்கில் பார்த்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித், “தங்கலான் படம் வெளியாகி, பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. மக்கள் பலரும் பார்த்துவிட்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தப் படம் நிச்சயம் எல்லோரிடத்திலும் சென்று சேரும் என நம்புகிறேன். எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

“வித்தியாசமாக கதை சொல்ல வேண்டும் என நான் யோசிப்பது இல்லை. நான் சொல்ல வேண்டும் என்பதை எனது படைப்புகள் மூலம் சொல்கிறேன்,” என ரஞ்சித் தெரிவித்தார்.

ஸ்டுடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

இதற்கிடையே தங்கலான் படக்குழுவுக்கு நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“எனக்குத் தெரிந்த மிகக் கடினமாக உழைக்கும் நடிகர்களில் ஒருவரான விக்ரம் அவரின் ‘தங்கலான்’ படத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று தனுஷ் பதிவிட்டுள்ளார்.

“வாழ்த்துகள் பா.ரஞ்சித், விக்ரம். பெரும் உழைப்பின் வழி பெரும் வெற்றிக்குத் தயாராகும் மொத்த படக்குழுவுக்கும் என் வாழ்த்துகளும் பிரியமும்” என்று இயக்குனர் மாரி செல்வராஜ் சமூக ஊடகத்தில் பதிவிட்டார். 

படம் வெளியாகிய முதல் நாளில் மட்டும் ‘தங்கலான்’ ரூ. 26.5 கோடி வசூல் செய்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்