தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மிரட்டுகிறார் ‘தி கோட்’!

2 mins read
228a8ae1-2881-4695-ab1f-aba2cb745514
‘தி கோட்’ படத்தின் டிரெய்லரில் விஜய் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி. - காணொளிப் படம்: டி-சீரிஸ் / யூடியூப்

ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்க்கும் வகையில் ‘வேற லெவல்’லில் அமைந்துள்ளது தளபதி விஜய்யின் ‘தி கோட்’ டிரெய்லர்.

ஒரு பிரபல ஹாலிவுட் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் போல் அமைந்துள்ள டிரெய்லர் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) வெளியானது. சமூக ஊடகங்களில் ரசிகர்களிடையே உற்சாக சூறாவளி வீசுகிறது.

Watch on YouTube

டிரெய்லர் வெளியீடு சற்று தாமதமாக இடம்பெற்றிருந்தாலும் அது விஜய் ரசிகர்களின் பசிக்கு தேவாமிர்தமாக அமைந்துவிட்டது. அறிவியல் அம்சங்களைக் கொண்டு உருவாகியிருக்கும் சை-ஃபை படமான ‘தி கோட்’டில் பல்வேறு ‘கெட்அப்’புகளில் கலக்குகிறார் விஜய்.

தந்தை, மகன் என இரு வேடங்களில் நடிக்கும் ‘தளபதி’க்கு அதிரடி ‘ஆக்‌ஷன்’ காட்சிகள் புதிதல்ல என்றாலும்கூட இப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் அவரை வேறு பரிமாணத்தில் காட்டுகின்றன.

13 ஆண்டுகளுக்கு முன்பு ‘தல’ அஜித்தை வைத்து ‘மங்காத்தா’வை இயக்கிவிட்டு ‘தளபதி’யை வைத்து ஒரு படம் இயக்க முடியவில்லையே என்றதன் ஏக்கத்தைத் தீர்த்துக்கொண்டுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.

தற்போது 50 வயதைத் தொட்டுவிட்ட விஜய்யிடம் இன்னமும் இளமைத் துடிப்பு குறையவில்லை. இருந்தாலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இளம் வயது விஜய்யை, வெங்கட் பிரபு மீண்டும் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

படத்தில் இளையராகத் தோன்றும் விஜய்.
படத்தில் இளையராகத் தோன்றும் விஜய். - காணொளிப் படம்: டி-சீரிஸ் / யூடியூப்

விஜய்யின் ரசிகர்களாக இல்லாதோரையும் திரையரங்குகளுக்கு ஈர்க்கும் வண்ணம் ‘தி கோட்’ டிரெய்லர் உருவாக்கப்பட்டுள்ளது.

இது ‘தளபதி’யின் படம்தான் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் படத்தில் இடம்பெறும் பல நட்சத்திரங்களுக்கும் அவரவர் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது டிரெய்லரின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. பிரசாந்த், பிரபுதேவா, 80களின் ‘காதல் நாயகன்’ மோகன், ஜெயராம், லைலா, சினேகா, மீனாக்‌ஷி செளத்ரி, பிரேம்ஜி அமரன், பார்வதி நாயர் உட்பட நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் உள்ளது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா இணைந்து கலக்கும் ‘தி கோட்’.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா இணைந்து கலக்கும் ‘தி கோட்’. - காணொளிப் படம்: டி-சீரிஸ் / யூடியூப்

ஒரு காலத்தில் கோலிவுட்டில் உச்சத்தைத் தொடும் போட்டியில் ஈடுபட்டிருந்த பிரசாந்தும் விஜய்யும் இத்தனை காலத்துக்குப் பிறகு சேர்ந்து நடிப்பது கண்களுக்கு விருந்தாக அமையலாம். 80களின் பிரபலம் மோகன் மீண்டும் தமிழ்த் திரையுலகில் வலம் வருவது, விஜய்யின் ஒரு கதாபாத்திரத்துக்கு சினேகாவை ஜோடியாகப் பார்ப்பது போன்ற அம்சங்கள் அந்தக் கால தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பழைய நினைவுகளைக் கொண்டுவரலாம்.

படத்தின் வில்லன் ‘மைக்’ மோகன்.
படத்தின் வில்லன் ‘மைக்’ மோகன். - காணொளிப் படம்: டி-சீரிஸ் / யூடியூப்

மறைந்த ‘புரட்சிக் கலைஞர்’ விஜயகாந்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியோடு கெளரவ வேடத்தில் நடித்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. அந்தக் காட்சி டிரெய்லரில் இடம்பெறவில்லை.

மேலும், படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. 2003ஆம் ஆண்டு வெளியான ‘புதிய கீதை’க்குப் பிறகு மீண்டும் விஜய் படத்துக்கு இசையமைத்துள்ளார் யுவன்.

செப்டம்பர் ஐந்தாம் தேதி இன்றே வராதா என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர் ‘தளபதி’ ரசிகர்கள். அன்றுதான் ‘தி கோட்’ திரையரங்குகளில் வெளியாகிறது.

அரசியலில் நுழையவுள்ள விஜய்க்கு ‘தி கோட்’தான் இரண்டாவது கடைசி படமாகும். ‘உங்களை லீட் பண்ண போறது ஒரு புது லீடர்’ (உங்களை வழிநடத்தப்போவது ஒரு புதிய தலைவர்) என்று டிரெய்லரின் தொடக்கத்தில் பிரசாந்த் கூறுவதைக் கேட்க முடிகிறது. அந்த வரி விஜய்யின் அரசியல் கனவைக் கருத்தில்கொண்டு எழுதப்பட்டதோ!

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திவிஜய்வெங்கட் பிரபு