தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கங்குவா, வேட்டையன் மோதல்

2 mins read
e6e603ca-def7-4f56-b2d8-4a348505ca35
‘வேட்டையன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த். - காணொளிப் படம்: லைக்கா மியூசிக் / யூடியூப்
multi-img1 of 2

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம்10ஆம் தேதி வெளியாகவிருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இவ்விரு படங்களும் ஒரே நாளில் வெளிவரக்கூடும் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

‘ஜெய்பீம்’ புகழ் ஞானவேல் இயக்கியுள்ள ‘வேட்டையன்’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் அனிருத்.

முன்னதாக, அதே நாளில் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியாவது சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

‘ஜெய்பீம்’மில் அசத்திய சூர்யா, இப்போது அதன் இயக்குநர் ஞானவேலின் மற்றொரு மாபெரும் படைப்பான ‘வேட்டையனுடன்’ மோதவுள்ளார்.

‘கங்குவா’வில் திஷா பத்தானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். யுவி கிரியேஷன்ஸ், ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரஜினிகாந்தின் ‘தர்பார்’, ‘அண்ணாத்த’ எதிர்பாராத வரவேற்பைப் பெறாததைத் தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ சூப்பர்ஹிட் ஆனது. பொதுவாக வசனம் பேசி அசத்தும் ரஜினி, ‘ஜெயிலர்’ படத்தில் தனது அமைதி ‘அவதாரத்தை’ வெளிப்படுத்தியிருந்தார்.

சூர்யா, பாண்டிராஜின் ‘எதர்க்கும் துணிந்தவன்’ படத்துக்குப் பிறகு கதாநாயகனாக நடித்த படம் ஏதும் வெளியாகவில்லை. எனினும், லோகே‌ஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து அசத்திய ‘விக்ரம்’ படத்தில் ரோலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் கடைசி சில நிமிடங்களுக்குத் தோன்றி கைதட்டல்களைப் பெற்றார் சூர்யா.

அதன் மூலம் கமல்ஹாசன், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, கார்த்தி, நரேன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள லோகே‌ஷ் கனகராஜின் ‘எல்சியூ’ சினிமா உலகில் சூர்யாவும் அங்கம் வகிக்கிறார்.

ரஜினியும் தனது அடுத்த படத்தில் லோகே‌ஷுடன் இணைகிறார். லோகே‌‌ஷின் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘கூலி’ அடுத்த ஆண்டு வெளிவரவுள்ளது.

குறிப்புச் சொற்கள்