விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (தி கோட்).
பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளனர்.
செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகவிருக்கும் ‘தி கோட்’டின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அதில் கேள்வி எழுப்பப்பட்டபோது பேசிய வெங்கட் பிரபு, “ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படத்துக்காக விஜய்யுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலிசில் தொடங்கினோம். உலகின் சிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ‘லோலா’வுடன் இணைந்தோம். இந்நிறுவனம் ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறது. இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைய உண்டு.
“திலீப் மாஸ்டர் கடுமையாக உழைத்திருக்கிறார். விஜய் சாரை இது போன்றதொரு ‘கமர்ஷியலான’ படத்தில் பார்க்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. அது நிறைவேறிவிட்டது. ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்காகவும் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கவேண்டியதாகிவிட்டது. இது அரசியல் படமல்ல. விஜய் சார், எப்போதும் கதையில் தலையிடமாட்டார்,” என்று கூறினார்.