1990 காலகட்டங்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் டாப் ஸ்டார் பிரசாந்த். நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ‘தி கோட்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் மீண்டும் திரைத்துறையில் வெற்றிக்கொடி நாட்ட விரும்பும் பிரசாந்த், வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். விஜய், அஜித் ஆகிய இருவரும் ரசிகர்களிடம் பிரபலமாகும் முன்பே 1990களில் பல வெற்றிப் படங்களில் நடித்து பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக வலம் வந்தவர்.
மணிரத்னம், பாலுமகேந்திரா, ஷங்கர் என முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்துள்ள பிரசாந்த், சில ஆண்டுகளுக்கு முன்னர் திரையுலகை விட்டு விலகியிருந்தார். அதேநேரம் திருமண வாழ்க்கையிலும் பிரசாந்த் அடுத்தடுத்து பல பிரச்சினைகளை சந்தித்தார்.
இதனால் ஒருகட்டத்தில் தனது மனைவி கிரஹலட்சுமியை பிரிந்த பிரசாந்த், இப்போது வரை தனிமையில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிரசாந்த்துக்கு வாய்ப்பு வந்தது.
இதன்மூலம், திரையுலகில் மீண்டும் வெற்றி நாயகனாக வலம்வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இரு தினங்களுக்கு முன்னர் ‘தி கோட்’ படத்தில் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்துள்ளார் பிரசாந்த்.
முன்னதாக பிரசாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளியான அந்தகன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில், அவருக்கு மறுமணம் செய்ய அவரது தந்தை தியாகராஜன் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
இந்நிலையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரசாந்த், அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘தி கோட்’ படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் திரைத்துறையில் தனது பயணம் குறித்தும் பேசினார்.
அப்போது, ஆண்டுக்கு 4 திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட இயக்குநர்கள் என்றில்லாமல், அனைத்து இயக்குனர்களுடன் பணியாற்ற விரும்புவதாகவும் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
‘தி கோட்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே பிரசாந்துக்கு சில இயக்குனர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்ததாக சொல்லப்பட்டது. அதில், இப்போதைக்கு 3 படங்களில் அவர் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் அந்தப் படங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல், விரைவில் பிரசாந்தை திருமணம் செய்யவுள்ளது யார் என்ற தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 90களில் காதல் மன்னனாக வலம் வந்த பிரசாந்த் பற்றி, இக்கால ரசிகர்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர்களுக்கு ‘தி கோட்’ படம் மூலம் பிரசாந்த் தன் திறமையை நிரூபிப்பார் என அவரது ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

