சென்னை பெண்ணாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர் பிரியா ஆனந்த். ‘வாமனன்’, ‘எதிர்நீச்சல்’, ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’, உட்பட பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார். அவர் நடித்து அண்மையில் வெளியான ‘அந்தகன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், குங்குமம் வார இதழ் பிரியா ஆனந்திடம் நேர்காணல் ஒன்றை நடத்தியிருந்தது. அதில், அவரிடம் சுவாரசியமான பல கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த நேர்காணலின் சில துளிகள் இந்தக் கட்டுரையில் இடம்பெறுகின்றன.
“ ‘அந்தகன்’ படம் இந்தி மொழியில் ‘அந்தாதூன்’ என்ற பெயரில் வெளியானது. அப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்து இருந்தனர். அதன் தமிழ் பதிப்பில் நடிப்பேன் என நான் எதிர்பார்க்கவில்லை,” என ‘அந்தகன்’ பட அனுபவம் குறித்து பிரியா ஆனந்த் கூறினார்.
மேலும், இயக்குநர் தியாகராஜன் இப்படத்தில் நடிப்பதற்காக தன்னை அணுகியதும், உடனே இப்படத்தில் நடிக்க ஒப்புகொண்டதாக அவர் தெரிவித்தார்.
“இப்படம் என்னுடைய திரையுலகப் பயணத்தில் முக்கியமான படம்,” எனக் கூறி அப்படத்தின் வெற்றியை எண்ணி நெகிழ்ந்தார். இப்படத்தில் நடித்த அனைவரும் தனித்துவமானவர்கள் என்றும் அவர்களுடன் தான் பணியாற்றியது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.
படங்களின் வெற்றி தோல்வி
உங்கள் படங்களின் வெற்றி தோல்வியை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு,” நான் அனைத்தையும் ஒரே கண்ணோட்டதில் தான் பார்க்கிறேன். நான் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு நடிகையாக என்னை நானே நினைத்துக்கொள்கிறேன். என் படங்கள் தொடர்ந்து வெளிவரவில்லை என்றாலும் ரசிகர்கள் என்னை நினைவுவைத்திருக்கிறார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெறும்போது நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளமாட்டோம். தோல்வி அடையும்போது தான் நாம் யார் என்பது நமக்குத் தெரியும். வாழ்க்கை என்பது இன்பம், துன்பம் கலந்த கலவையான உணர்வுகளை உள்ளடக்கியது. பொதுவாக நாம் மகிழ்ச்சிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து பழகி விட்டோம்.
மகிழ்ச்சியை எப்படி ஏற்றுக்கொள்கொறோமோ அதே மாதிரி துன்பத்தையும் ஏற்றுக்கொண்டு முன்னேறி வருவது தான் வாழ்க்கை என்றார் பிரியா ஆனந்த்.
தொடர்புடைய செய்திகள்
திரையுலகில் கற்றது
திரையுலகில் அவர் கற்றுகொண்டது பற்றிய கேள்விக்கு, “திரைப்படங்களைப் பார்க்கும் மக்கள் என்ன கற்றுக்கொண்டார்களோ அதைத்தான் நானும் கற்றுக்கொண்டேன். அனைத்து மக்களுக்கும் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறதோ அவை அனைத்தும் எனக்கும் இருக்கிறது.
உலகம் நம்மை எவ்வளவு வெறுத்தாலும் தன்னம்பிக்கை விடாமல் மனஉறுதியுடன் போராட வேண்டும். மகிழ்ச்சிக்கான வழிகள் குறித்து சிந்தித்து அதை நோக்கி பயணிக்க வேண்டும். சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதில் தான் நம் வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது,” என அவர் கூறினார்.
திரைத்துறை அனுபவம்
“திரையுலகிற்கு வந்த புதிதில் அனைத்துமே என் ஆர்வத்தைத் தூண்டியது. ஆரம்பத்தில், திரைப்படங்களைப் பற்றியும் திரையுலகைப் பற்றியும் எதுவும் தெரியாது. ஆனால், தற்போது திரையுலகைப் பற்றி நான் நிறையக் கற்றுக்கொண்டேன்.
நடுத்தர குடும்பங்களில் இருக்கிறவர்களுக்குச் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது மிகப் பெரிய கனவு.அந்தக் கனவு தயாரிப்பாளர்கள், பார்வையாளர்களால் எனக்கு நிறைவேறி இருக்கிறது. அதற்காக அனைவருக்கும் நன்றி.
ஸ்ரீதேவியுடன் நடித்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ தான் நான் நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம். அவருடன் நடித்தது என்னுடைய பாக்கியம் எனக் கூறி நேர்காணலை நிறைவு செய்தார் பிரியா ஆனந்த்.

