“யாருங்க ரஜினிகாந்த்? அவருடன் எல்லாம் என் மகள் ஜோடியாக நடிக்க வாய்ப்பு இல்லை,” எனக் கதாசிரியரும் தயாரிப்பாளருமான கலைஞானத்திடம் கறாராகச் சொன்னார் ஸ்ரீ பிரியாவின் தாயார் அலமேலு.
ஆனால், கலைஞானம் கதை எழுதிய படங்களில் நடித்திருந்த ஸ்ரீபிரியா, தன் அம்மாவைச் சமாதானப்படுத்தி, ரஜினி முதன்முதலாக கதாநாயகனாக நடித்த ‘பைரவி’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்தச் சமயத்தில் ஸ்ரீபிரியா மிகப்பெரிய நடிகையாக இருந்தார்.
‘பைரவி’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அடுத்தடுத்து ‘பில்லா’, ‘தாய் மீது சத்தியம்’ என ரஜினியின் படங்களில் நாயகியாக நடித்தார் ஸ்ரீபிரியா. ரஜினி-ஸ்ரீபிரியா ‘ரீல்’ ஜோடியின் திரை உடல்மொழி அந்தக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அடுதடுத்த காலங்களில் ரஜினி - கௌதமி ஜோடிப் பொருத்தமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
[ο]‘மூன்றாம் பிறை’ படம் வெளியானபோது, அப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலு மகேந்திராவிடம், “இப்படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஸ்ரீதேவியும் சிறப்பாகத்தானே நடித்திருந்தார்?” எனச் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு அவர், “ஸ்ரீதேவி உயரத்திலிருந்து கொட்டும் அழகிய அருவி என்றால்... அந்த அருவிக்கு அழகுசேர்க்கும் விதமாக, நீரை தன் மீது மோதவிட்டு, நீர்த்துளிகளைப் பட்டுத் தெறிக்கவிட்ட பாறை போன்றவர் கமல்,” எனப் பதில் சொன்னார்.
அந்தளவு தனித்துப் பிரிக்க முடியாத, தனித்துவமாக இருந்தது இந்த ஜோடி.
‘மீண்டும் கோகிலா’ படம் வெளியான காலகட்டத்தில் இருந்தே கமல், ஸ்ரீதேவி நடிப்பில் குறிப்பாக, காதல் காட்சிகள் மிக யதார்த்தமாக மிளிரும். ‘வாழ்வே மாயம்’, ‘குரு’ எனப் பல படங்களிலும் இந்த இணை அசத்தியது.
தொடர்புடைய செய்திகள்
[ο]‘பூந்தோட்ட காவல்காரன்’, ‘நல்லவன்’, ‘நானே ராஜா நானே மந்திரி’ உட்பட விஜயகாந்த், ராதிகா இணைந்து நடித்த படங்களில் எல்லாம் ரசிகர்களால் இவர்களின் ஜோடிப் பொருத்தம் கொண்டாடப்பட்டது.
ஒரு கட்டத்தில் இருவரும் நிஜமாகவே காதல்வயப்பட்டார்கள். ஆனால், விஜயகாந்தின் குடும்பத்தினர் எதிர்ப்பு காரணமாக இந்தக் காதல் கைகூடவில்லை.
“குடும்பப் பெண்ணாகத் தேடுகிறோம்,” என விஜயகாந்த் வீட்டார் சொல்ல, “நடிகைகள் எல்லாம் குடும்பத்தில் இருந்து வராமல், வானத்தில் இருந்தா குதித்தனர்?,” என ராதிகா பகிரங்கமாகப் பேட்டி கொடுத்தார்.
இப்போதும் ராதிகா, விஜயகாந்த் ஜோடிப் படங்களைப் பார்த்தால் அவர்களின் அன்யோன்யமான காட்சிகளில் ஓர் உயிரோட்டம் இருக்கும்.
[ο]பிரபு, அம்பிகாவுக்குமான ஜோடிப் பொருத்தம் அருமையாக அமைந்தது.
விளைவு... இருவரும் நிஜத்திலும் காதலிப்பதாக பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த பரபரப்பிற்கு சிவாஜி முற்றுப்புள்ளி வைத்தார். ஏவிஎம் தயாரித்த ‘வாழ்க்கை’ படத்தில் சிவாஜியும் அம்பிகாவும் ஜோடியாக நடித்ததால், பிரபு-அம்பிகா காதல் பரபரப்பு ஓய்ந்தது.
பிரபு - குஷ்பு ஜோடிப் பொருத்தமும் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தது. ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் தொடங்கிய இந்த ஜோடிப் பொருத்தம், ‘சின்ன தம்பி’ படம் மூலம் நிஜ வாழ்க்கையிலும் நெருக்கமடைய வைத்தது. பிறகு... சிலகாலம் காதல்வயப்பட்ட இருவரும் பின்னர் பகிரங்கமாகப் பிரிந்தனர்.
[ο]‘அலைகள் ஓய்வதில்லை’, ‘இளஞ்ஜோடிகள்’ படங்களில், ஒரே சமயத்தில் இணைந்து அறிமுகமாகி நடித்த கார்த்திக் - ராதா ஜோடி ரசிகர்களை ஏங்க வைத்தது எனலாம்.
‘வருஷம் 16’ படத்தில் ‘பட்லர்’... ‘பட்லர்’... எனச் சொல்லிக்கொண்டு குஷ்புவை கார்த்திக் வம்பு செய்யும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆயினும், கார்த்திக் - ரேவதி ஜோடிப் பொருத்தம் சொல்லில் அடங்காத பரவசம். அதிலும், ‘மௌன ராகம்’ படத்தில் இந்த ஜோடியின் குறும்பையும் குதூகலத்தையும் மறக்க முடியுமா?
[ο]ஆயிரம் தான் சொல்லுங்கள்... விஜய்க்கு ஜோடியாக நடிப்பதென்றால், ‘கில்லி’யாக துள்ளி வருவார் திரிஷா. இவர்களின் திரை ரசவாதம் ‘அப்படிப்போடு போடு போடு’ என ரசிகர்களால் மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட இருவராலும்கூட ரசிக்கப்படுகிறது.
அசினும் விஜய்க்கு பொருத்தமான ஜோடிகளில் ஒருவராக ரசிகர்களால் கருதப்பட்டார்.
[ο]‘அமர்க்களம்’ படத்தில் நடித்தபோது அஜித் - ஷாலினி இடையேயான பொருத்தம் ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் அஜித் முதுகுத்தண்டில் அடிபட்டு, வலியால் அவதிப்பட்டு வந்தார். அப்போது ஷாலினி காட்டிய அக்கறை அஜித்தை நெகிழச் செய்தது.
இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக இருவரும் ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் தவித்தனர்.
“நான் அப்போது பெரிய நடிகன் இல்லை. ஆனால் ஷாலினி பெரிய நடிகையாக புகழ் பெற்றிருந்தார். ஆயினும், என் மீது மிகவும் பரிவும் பாசமும் காட்டினார். ஷாலினி எனது மனைவியானது எனது அதிர்ஷ்டம்,” என அஜித் அப்போது சொல்லியிருந்தார்.
[ο]சூர்யாவுக்கு பொருத்தமான திரை இணை ஜோதிகா. ‘காக்க காக்க’ படத்தில் தொடங்கிய இந்த ‘ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி’, நிஜத்திலும் காதலானது. பரபரப்பான செய்திகள் வந்துகொண்டிருக்க, சூர்யாவுக்கு கோவையில் தங்கள் சொந்தத்தில் பெண் பார்த்து திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர் அவர் வீட்டார்.
ஆனால்... இதையறிந்த சூர்யா, ‘பேரழகன்’ படத்தில், ‘இந்த ஊரே எதிர்த்தாலும் நீதான் என் பொண்டாட்டி’ என ஜோதிகாவிடம் சொல்வதுபோல் வசனத்தை வைக்கச் சொல்லி, தன் படம் மூலம், தனது காதலின் வலிமையை வீட்டாருக்கு உணர்த்தினார்.
[ο]‘ஏப்ரல் மாதத்தில்’, ‘பார்த்திபன் கனவு’ படங்களில் ஸ்ரீகாந்த்திற்கும் சிநேகாவிற்கும் இடையேயான காதல் காட்சிகளை இப்போது பார்த்தாலும், அவர்களுக்கு இடையே உண்டான உருகலும் மருகலும் நம்மால் உணரக்கூடியதாக இருக்கும்.
ஸ்ரீகாந்த் தனது ‘மனி பர்சி’ல் சிநேகாவின் தலைமுடி ஒன்றை பத்திரப்படுத்தி வைத்த சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் இந்தக் காதல் திரையோடு தீர்ந்துபோகச் செய்யப்பட்டது.
[ο]‘தொட்டி ஜெயா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க தமிழுக்கு புதுமுகமாக வந்தவர் நயன்தாரா. ஆனால் முகவெட்டு சரியில்லை என சிம்பு நிராகரித்ததால் கோபிகா ஜோடியாக நடித்தார்.
முதலில் சிம்புவால் நிராகரிக்கப்பட்ட நயன்தாரா மீது, பிறகு சிம்பு காதல் பைத்தியம் பிடித்து அலைந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
[ο]‘பையா’ திரைப்படம் மூலம் கார்த்தி - தமன்னா ஜோடி ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்தது.
ஆனால்... திரைக்கு வெளியேயும் இவர்களது காதல் ‘கெமிஸ்ட்ரி’ வர்க்-அவுட் ஆவதாக பரபரப்புச் செய்திகள் படையெடுக்க, உடனடியாக கார்த்திக்கு பெண் பார்த்து திருமணம் செய்துவைத்தனர் கார்த்தியின் பெற்றோர்.
விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியின் திரைக்காதல், விஜய் சேதுபதி வீட்டில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. சேதுவும் ஐஸ்வர்யாவுக்கு தன் படங்களில் வாய்ப்பளித்தார். இதனால் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டனர்.
காதைக் கொண்டாங்க... ஒரு ரகசியம்....
உங்கள் மனைவியை விட உங்களுக்கு பொருத்தமான ஜோடி வேற யாராக இருக்க முடியும்.