பணம்தான் அதிகாரம் என்பதை புரிந்துகொண்டது தனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறியுள்ளார் நடிகை வித்யா பாலன்.
நிதி சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்த ஓர் உரையாடல் நிகழ்வில் பங்கேற்ற அவர், பெண்கள் தங்கள் நிதிக்குபொறுப்பேற்க வேண்டியது ஏன் அவசியம் என்பது குறித்து தனது கருத்துகளை அனைவருக்கும் புரியும் வகையில் பகிர்ந்து கொண்டார்.
“ஓர் ஆண்டுக்கு முன்புதான் பணம் என்பது எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்தேன். சம்பாதிப்பது மட்டும் முக்கியம் அல்ல. உங்களது பொருளியலை நீங்களே நிர்வகிப்பதாகவும். நமக்கு நாமே பொறுப்பேற்பது முக்கியம்.
“பணத்தை எப்படிச் சேமிப்பது, செலவு செய்வது, முதலீடு செய்வது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். பணத்தை நிர்வகிப்பது உங்களுக்கு பலத்தையும் வாழ்க்கையை பயமின்றி எதிர்கொள்ளவும் உதவும்,” என்றார் வித்யா பாலன்.
பெண்கள் பணத்துக்காக மற்றவர்களைச் சார்ந்து இருக்கும்போது அது அவர்களை விரும்பிய திருமணம், வேலையைச் செய்யவிடாமல் திணறடிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“பலருக்கும் தங்களது கனவுகளை அடைய முடியாமல் இருக்க பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவேதான் பொருளாதார தன்னிறைவு என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியமானது,” என்றும் வித்யா பாலன் மேலும் தெரிவித்தார்.