விஜய்யுடன் இணைந்து நடித்ததால் தனது திரைப்பயணம் தொய்வடைந்து விட்டதாகக் கூறியுள்ளார் நடிகை மீனாட்சி சௌத்ரி. இவர் ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார்.
இந்தப்படம் வெளியான பின்னர் தமிழ்த் திரையுலகில் தனது மதிப்பு உச்சத்துக்குச் செல்லும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், ஏமாற்றமே மிஞ்சியதாக அண்மைய பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
“கோட்’ படத்தில் நான் ஏற்று நடித்த ஸ்ரீநிதி கதாபாத்திரத்துக்காக பலரும் என்னை கேலியும் கிண்டலும் செய்தனர். சமூக ஊடகங்களில் என்னைப்பற்றி நையாண்டி செய்து பலரும் பதிவிட்டனர். காரணம், எனக்கு எந்தவிதமான முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
“நல்லவேளையாக அண்மையில் நான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படம் வெற்றி பெற்றுள்ளது. அதில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் மன உளைச்சல் மறைந்து மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது,” என்று மீனாட்சி சௌத்ரி கூறியுள்ளார்.