‘ஜனநாயகன்’ படத்துக்குத் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்

3 mins read
4f5b752b-f3d3-4d31-acfd-e224dc8672c5
விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம், ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. - படம்: ஜனநாயகன் முன்னோட்டக் காட்சி
multi-img1 of 2

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள கடைசிப் படம் என்பதால், இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், இப்படத்துக்குத் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்படும் அதிகமான பங்குத் தொகையே காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாகத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார்.

“விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்கு 60 விழுக்காடு திரையரங்குகளும், சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்துக்கு 40 விழுக்காடு திரையரங்குகளும் ஒதுக்குவதாக இருந்தது. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துக்கு 75 முதல் 80 விழுக்காடு வரை பங்குத் தொகை கேட்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படித் திரையரங்குகள் நடத்தி சம்பளம் கொடுப்பது?,” என்றார் திரு சுப்பிரமணியம்.

“70 விழுக்காடு வரை பங்குத் தொகை கொடுக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், 75 விழுக்காடு வரை கேட்கிறார்கள். திருநெல்வேலியில் 80 விழுக்காடு பங்குத் தொகை வேண்டும் என்கிறார்கள். இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது,” என்றார் அவர்.

“கேரளாவில் 60 விழுக்காடு பங்குத் தொகைக்குத்தான் ‘ஜனநாயகன்’ திரையிட உள்ளார்கள். பாலக்காட்டில் 60 விழுக்காடு பங்குத் தொகை, கோயம்புத்தூரில் 75 விழுக்காடு பங்குத் தொகை என்கிறார்கள். எங்களுக்குள் ஒற்றுமையில்லை என்பது ஒரு பிரச்சினை,” என்று அவர் குறிப்பிட்டார்.

“இதற்கு முன்னர் ‘கோட்’ படத்துக்கும் இதே 75 விழுக்காடு பங்குத் தொகை. பட வெளியீட்டுக்கு முந்தைய நாள்வரை போராடிப் பார்த்தோம். ஆனால், ஒரே ஒரு படம் மட்டுமே வெளியானதால் வேறு வழியின்றிக் கொடுத்துவிட்டோம்,” எனத் திரு சுப்பிரமணியம் சொன்னார்.

“உடனே இதற்கு அரசியல் காரணம் இருக்கும் என்கிறார்கள். எங்களுக்கு எந்தவொரு மேலிடத்திலிருந்தும் அழுத்தமில்லை. நியாயமான பங்குத் தொகை கேட்டால் உடனடியாகத் திரையரங்குகள் ஒப்பந்தம் தொடங்கும். இதனால் சில திரையரங்குகளில் ‘பராசக்தி’ படத்தினைப் போட்டுவிட்டார்கள். ‘பராசக்தி’ படத்துக்குப் பல திரை கொண்ட திரையரங்குகளுக்கு 50 விழுக்காடு, ஒற்றைத் திரையுள்ள திரையரங்குகளுக்கு 60 முதல் 65 விழுக்காடுதான்,” என்று அவர் கூறினார்.

“விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துக்குப் பல திரை கொண்ட திரையரங்குகளுக்கு 60 விழுக்காடும், ஒற்றைத் திரையுடனான திரையரங்குகளுக்கு 75 முதல் 80 விழுக்காடுவரையும் கேட்கிறார்கள். இதனால் ‘ஜனநாயகன்’ படத்துக்குத் திரையரங்குகள் அதிகமாகக் கிடைப்பதில் சிரமம் இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.

80 மில்லியன் பார்வைகள்

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் முன்னோட்டக் காட்சிகள் 80 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

யூடியூப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக ஊடகப் பக்கங்களில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 83 மில்லியன் பார்வைகளை 24 மணி நேரத்தில் கடந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

முன்னோட்டத்தில் விஜய்யின் அரசியல் வருகை குறித்த மறைமுகமான வசனங்கள் இடம்பெற்றுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இயக்குநர் வினோத் இயக்கும் ‘ஜனநாயகன்’ படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்