தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போராடினால் வெற்றிக்கான வாசல் திறக்கும்: வெண்பா

3 mins read
2fa01f54-dedf-4aec-a813-8dae28a2d737
வெண்பா. - படம்: ஊடகம்

குழந்தை நட்சத்திரமாக 15 படங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள், கதாநாயகியாக 10 படங்கள் என 25 படங்களை நடித்து முடித்துள்ளார் வெண்பா.

‘கற்றது தமிழ்’ படத்தில் கதாநாயகி அஞ்சலியின் இளவயது கதாபாத்திரத்தில் நடித்த வெண்பா, ‘காதல் கசக்குதையா’ படத்தின் மூலம் கதாநாயகியாக மாறியுள்ளார். அந்தப் படம் வெளியாகி ஏழாண்டுகள் கடந்துவிட்டன.

“இடைப்பட்ட காலத்தில் கல்லூரிக்குச் செல்லும் சூழல் அமையாததால் தொலைதூரக் கல்வி முறையின்கீழ் வழக்கறிஞராக சட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறேன்,” எனக் கூறும் வெண்பா, ஒவ்வொரு படத்திலும் தனது கதாபாத்திரம் வித்தியாசமாக அமைய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாகச் சொல்கிறார்.

‘மாயநதி’ படத்தில் முழுக்கதையையும் சுமக்கும் கதாபாத்திரத்தில் நடித்தது நல்ல அனுபவமாக அமைந்தது எனக் குறிப்பிடுபவர், முதன்முதலாக ‘சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி’ படத்தில்தான் குழந்தை நட்சத்திரமாக நடித்தாராம். அன்று முதல் தாம் நடிக்கும் அனைத்துப் படங்களுக்கும் பல கதாபாத்திரங்களுக்குத் தாமே பின்னணிக் குரல் கொடுத்து வருகிறார்.

அடுத்ததாக, ‘அஸ்திரம்’ என்ற படத்தில் நடிகை கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளாராம். இந்தப் படம் மிக விரைவில் திரைகாண உள்ளது. மேலும் மூன்று புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ள வெண்பாவை அடுத்தடுத்து சில இணையத் தொடர்களிலும் பார்க்க முடியும்.

“வேலை என்று வந்துவிட்டால் நேரக்கட்டுப்பாடு என்பது மிக முக்கியம். மேலும் முழு திறமையை வெளிப்படுத்தி நடித்தால்தான் பின்னர் நமக்கான வாய்ப்புகள் தேடி வரும்.

“மேலும் உடல்நலத்தைப் பாதுகாத்துக்கொள்வதும் முக்கியம் என்பதை உணர்ந்திருக்கிறேன். உடல்நிலை சரியில்லை என்றால் அகத்தின் அழகை முகம் காட்டிக் கொடுத்துவிடும்.

“இது போன்று பலருக்கு நடந்துள்ளது என்பதை அறிவேன். எனவேதான் உடல்நலத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிறேன்,” என்று பொறுப்புடன் பேசும் வெண்பா, வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு முறையாவது நடிக்க வேண்டுமென விரும்புகிறாராம்.

மேலும் வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய கதைக்களங்களில் நடிக்கவும் ஆர்வமாக உள்ளார்.

ஒரு படத்துக்கான கதையை கேட்டு முடிக்கும் முன்பே அதில் தனக்கான கதாபாத்திரம் ஒத்துவருமா என்பதை முடிவு செய்து விடுகிறாராம் வெண்பா.

“என்னால் நன்றாக நடிக்க முடியும் என்று என் மனம் ஒப்புக்கொண்டால் மட்டுமே அந்த வாய்ப்பை ஏற்பேன். இல்லையெனில் வேண்டாம் என உறுதியாகக் கூறிவிடுவேன். இப்படித்தான் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து என்னைத் தேடி வருகின்றன,” என்று சொல்லும் வெண்பா, நல்ல நடனக் கலைஞர் என்பது பலருக்குத் தெரியாது.

எனினும், தனது நடனத்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் சரிவர அமையவில்லை என வருத்தப்படுகிறார்.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நாயகியாக அறிமுகமானபோது எப்படி இருந்தேனோ அதே போன்றுதான் இப்போதும் இருப்பதாகப் பலரும் என்னை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.

“மனதையும் உடலையும் பேணுவதற்கு தினமும் உடற்பயற்சி செய்வது அவசியம். மேலும் உணவுக்கட்டுப்பாடும் தேவை. திருமணம் குறித்தும்கூட பலரும் கேட்கிறார்கள். அப்படி ஓர் எண்ணம் ஏற்படவில்லை. என் பெற்றோரும் என்னை வற்புறுத்தியதில்லை.

“வருங்கால கணவர் தொழில், குடும்பம் ஆகிய இரண்டையும் பக்குவமாகக் கையாளும் திறமை கொண்டவராக இருந்தால் நல்லது,” என்று சொல்லும் வெண்பா, திரையுலகில் சாதிக்க மிகுந்த பொறுமை தேவை என்கிறார்.

அவரசப்பட்டால் ரசிகர்களும் திரையுலகத்தினரும் நம்மை மறந்து விடுவார்கள் என்பது, தாம் அறிந்த உண்மை என்றும் சொல்கிறார்.

“சினிமா உலகில் ஏற்றம், இறக்கம் என இரண்டும் மாறி மாறி அமையும். வெற்றி, தோல்விகளைத் தாங்கக்கூடிய மன உறுதி முக்கியம்.

“வாய்ப்பு இல்லை என்றாலும் திறமைகளை வளர்த்துக்கொள்ளத் தவறக் கூடாது. தொடர்ந்து போராடினால் வெற்றிக்கான வாசல் திறக்கும்,” என்று நம்பிக்கையோடு பேசுகிறார் இளம் நாயகி வெண்பா.

குறிப்புச் சொற்கள்