திரையுலகில் தனக்கென்று ஒரு தனிப்பாதையை உருவாக்கி வரும் நடிகர் விஷ்ணு விஷால், தான் கடுமையான உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதே நேரம், அந்தச் சவால்களையும் தாண்டி தனது அடுத்த படமான ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் விளம்பரப் பணிகளில் பம்பரமாகச் சுழன்று வருகிறார்.
இதுகுறித்துச் சமூக ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணலில், அண்மைக்காலமாகத் தனது முகத்தில் தென்படும் சோர்வு குறித்து அவர் விளக்கியுள்ளார்.
“கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக நான் ‘ஆட்டோ இம்யூன்’ நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளைத் தொடர்ந்து உட்கொண்டு வருகிறேன். அந்த மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவே என் முகத்தில் அந்தச் சோர்வு தெரிகிறது.
“எனது உடல்நிலையில் சவால்களை எதிர்கொண்டபோதிலும் ‘கட்டா குஸ்தி 2’ படத்திற்காக இரவு பகலாக உழைத்த ஒவ்வொரு கலைஞர்மீதும் எனக்குள்ள பொறுப்புணர்வுதான், என்னை இந்த நிலையிலும் தொடர்ந்து ஓட வைக்கிறது.
“உங்கள் அக்கறையும் அன்பும் இன்னும் சிறப்பாக என் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ள ஊக்குவித்துள்ளது.
“வரும் ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எங்கள் படத்தை நீங்கள் அனைவரும் பார்த்து ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்,” என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.
“மேலும், ‘கட்டா குஸ்தி 2’ படத்தில் முதல் பாகத்தைவிடவும் இரண்டு மடங்கு நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகள், குடும்பக் கொண்டாட்டம் எல்லாமே இருக்கும்.
முதல் பாகத்தில் கீர்த்தி (ஐஸ்வர்யா லட்சுமி) என்னிடம் குஸ்தி விளையாடுவதை மறைத்துவிடுவார். இந்த இரண்டாம் பாகத்தில் நாங்கள் இருவருமே சேர்ந்து ஒரு பெரிய சவாலை வெற்றிபெற்றாக வேண்டும். இந்த முறை படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு என ஒரு பெரிய நடிகர் பட்டாளம் பங்குகொள்கிறது. திரையரங்கில் எல்லாரும் வயிறு குலுங்கச் சிரித்து மகிழ்வீர்கள்.
“திரையுலகுக்கு வருவதற்கு முன்பு நான் கிரிக்கெட் விளையாட்டாளர் (TNPL வரை விளையாடி உள்ளேன்). அதனால் விளையாட்டுப் படங்கள் குறித்து எனக்கு நன்றாகப் புரியும்.
“ஒரு விளையாட்டாளரின் சிரமம், அவருடைய உழைப்பு இவற்றை எல்லாம் என்னால் எளிதாகத் தொடர்புப் படுத்திக்கொள்ள முடியும். அதுமட்டும் அல்லாமல், தமிழ் ரசிகர்களுக்கு விளையாட்டுப் படங்கள் எப்போதுமே மிகவும் பிடிக்கும்,” என்றார் அவர்.
தோற்றம், உடல் கட்டழகின் ரகசியம்?
“ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. தொடர்ச்சியாகச் செயல்படுவதுதான் முக்கியம். இப்போதுகூட எனக்கு உடல்நிலைச் சவால்கள் இருந்தாலும், என்னதான் படப்பிடிப்பில் பரபரப்பாகச் செயல்பட்டாலும் தினமும் உடற்பயிற்சி செய்யத் தவறுவதே இல்லை. மேலும், உணவுக் கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். மனத்தை எவ்வளவுக்கு நேர்மறையாக வைத்திருக்கிறோமோ, அவ்வளவு பொலிவு நமது முகத்தில் தெரியும்.
“அத்துடன், ‘கட்டா குஸ்தி 2’ பட வெளியீட்டிற்குப் பிறகு, ஒரு பெரிய திகிலூட்டும் படத்துக்கான கதையைக் கேட்டு அதில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளேன். ‘ராட்சசன்’ மாதிரி இதுவும் சிறந்த திகில் படமாக இருக்கும். அதுபோக அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படத்தில் நடிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது,” என்றார் விஷ்ணு விஷால்.
கண்டிப்பாக இந்த 2026, என் ரசிகர்களுக்குப் பொழுதுபோக்குப் படங்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும்.
“ரசிகர்கள்தான் என் மிகப் பெரிய சொத்து. எப்போதும் கொடுக்கும் அதே அன்பைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்க அதுதான் எனக்குத் துணிச்சலைத் தருகிறது. திரையரங்குக்கு வந்து படம் பார்த்து, தமிழ்த் திரைப்படங்களை ஆதரிக்க வேண்டும்,” என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘ஆட்டோ-இம்யூன்’ நோய் பற்றிய அறிவியல் விளக்கம்
பொதுவாக நம் உடலுக்குள் நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடி, நம்மைப் பாதுகாப்பதுதான் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் (Immune system).
ஆனால், இந்த ‘ஆட்டோ-இம்யூன்’ குறைபாடு ஏற்படும்போது, அந்த நோய் எதிர்ப்பு மண்டலம் குழப்பமடைந்து, கிருமிகளுக்குப் பதிலாக நம் உடலின் ஆரோக்கியமான நல்ல உயிரணுக்களையே தவறுதலாகத் தாக்கத் தொடங்கிவிடும். இந்தத் தலைகீழான செயல்பாட்டால்தான் உடலில் கடுமையான சோர்வும் பல்வேறு ஆரோக்கியப் பிரச்சினைகளும் உண்டாகின்றன. இதற்கான சிகிச்சையைத்தான் விஷ்ணு விஷால் தற்போது மேற்கொண்டு வருகிறார்.

