நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் உருவான ‘முத்து என்கிற காட்டான்’ இணையத் தொடரின் டீசர் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். தொடர்ந்து, ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கி, தனித்துவனமான கவனத்தை அவர் பெற்றார்.
இறுதியாக, அவர் இயக்கிய ‘கடைசி விவசாயி’ மிகச்சிறந்த இயக்குநர் என்கிற பெயரைப் பெற்றுத்தந்ததுடன் பலரும் கொண்டாடும் படமாகவும் மாறியது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ‘முத்து என்கிற காட்டான்’ புதிய தொடரிர் இருவரும் இணைந்துள்ளனர்.
தற்போது, இதன் விளம்பர முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். அதில், விஜய் சேதுபதியின் தலை மட்டும் காட்டப்படுகிறது. கழுத்துக்குக் கீழ்ப்பகுதியை அதில் காணமுடியவில்லை. மேலும், ‘என் முண்டத்தைக் கண்டுபிடிங்க’ என்று விஜய் சேதுபதி பேசும் வசனம், இது ஒரு விசித்திரமான, விறுவிறுப்பான திகிலூட்டும் கதையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
இத்தொடர் வரும் மார்ச் 27ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு வித்தியாசமான களத்தில் விஜய் சேதுபதியைப் பார்ப்பது அவரது ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

