விஜய் திரையுலகை விட்டு முழுநேர அரசியலுக்குச் செல்வதை அடுத்து, மற்ற நடிகர்கள் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நடிகர்கள் சிம்பு, சூர்யா, அஜித், தனுஷ், ரஜினி உள்ளிட்டோர் அடுத்து நடிக்க உள்ள படங்கள் குறித்த சில முக்கியத் தகவல்கள் வெளி வந்துள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
[ο] சிம்பு
நடிகர் சிம்பு, ‘தம்’ + ‘மன்மதன்’ + ‘வல்லவன்’ + ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஆகிய படங்களை இணைத்து உருவாகும் ஒரு கதையில்தான் அடுத்து நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இன்றைய கால இளையர்களின் காதலைப் பேசும் படமாக இது அமையும் என்கிறார்கள் ரசிகர்கள். எனினும் இயக்குநர் யார் என்பது தெரியவில்லை.
சிம்புவின் 48வது படத்தை கமல்ஹாசன் தயாரிக்க, தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்நிலையில், இந்தப் படத்தை சிம்பு தள்ளிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
[ο] ரஜினி
தொடர்புடைய செய்திகள்
ரஜினி அடுத்து ‘வேட்டையன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குநர் ஞானவேலிடம் கேட்டபோது, இரண்டாம் பாகத்தை எடுக்கும் ஆர்வமும் விருப்பமும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ரஜினி ஏற்று நடித்துள்ள ‘வேட்டையன்’ கதாபாத்திரத்தின் பின்னணியை வைத்து ஒரு கதையை எழுதும் எண்ணம் உள்ளது. ரஜினி இதற்குச் சம்மதித்தால் ‘வேட்டையன் -2’ உருவாகும்,” என்கிறார் ஞானவேல்.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடிக்கும் ரஜினி, அடுத்து ‘ஜெய்லர் 2’ படத்தில் நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது சிறுத்தை சிவா, வெங்கட் பிரபு என மேலும் சிலரது பெயர்கள் அடிபடுகின்றன. அண்மையில் ரஜினியை தாம் நேரில் சந்தித்தபோது அவரிடம் தாம் உருவாக்கி வைத்துள்ள கதையை விவரித்ததாக சிவா கூறியிருந்தார்.
இதேபோல் ரஜினியின் தீவிர ரசிகரான வெங்கட் பிரபுவும் தாம் அண்மையில் ரஜினியை சந்தித்ததாகக் கூறியுள்ளார்.
[ο] கார்த்தி
‘மெய்யழகன்’ படத்தையடுத்து, நடிகர் கார்த்தி மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ளது.
முன்னதாக மாரி செல்வராஜ், தான் எழுதிய கதையை நடிகர் தனுஷிடம் கூறியிருந்தாராம். தனுஷுக்கு அக்கதை பிடித்துப்போனதால் முதற்கட்ட பணிகள் தொடங்கின. இப்படத்தை ‘செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்’ தயாரிக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.
தற்போது அந்தக் கதையில்தான் கார்த்தி நடிக்கிறாராம். தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார்.
[ο] சூர்யா
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த ‘மூக்குத்தியம்மன்’ படம் வசூல் ரீதியில் வெற்றிபெற்ற நிலையில், அடுத்து திரிஷாவை வைத்து ‘மாசாணி அம்மன்’ என்ற படத்தை அவர் இயக்குவார் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் அப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
திரிஷாவுக்காக தயார் செய்த ‘மாசாணி அம்மன்’ கதையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து சூர்யாவை நடிக்கவைக்கிறாராம் ஆர்.ஜே.பாலாஜி.
இப்படத்தின் அறிவிப்பு சுவரொட்டிகளில் குதிரை, அரிவாள் எனப் பல குறியீடுகள் இடம்பெற இந்த மாற்றங்கள்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.
[ο] அஜித்
அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரு படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதையடுத்து, ‘சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் அவர் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘கேஜிஎஃப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், தற்போது இயக்கவுள்ள படத்தில் அஜித்தான் கதாநாயகன் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
[ο]அனுஷ்கா
நடிகை அனுஷ்கா முதன்முறையாக மலையாளப் படத்தில் நடித்துள்ளார். ‘கத்தனார்’ என்ற தலைப்பில் உருவாகும் அப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடியாம்.
மலையாள நடிகர் ஜெயசூர்யா நாயகனாக நடிக்கும் அப்படத்தில் வினீத், பிரபுதேவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடித்த படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.