தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஜினியின் புதுப் படங்கள்; ரசிகர்கள் உற்சாகம்

3 mins read
6cd60825-7021-4cf3-a619-60da073b47a7
ரஜினி. - படம்: ஊடகம்

‘வேட்டையன்’ படத்தையடுத்து, ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் சென்னை கோவலம் கடற்கரைப் பகுதியில் இப்படத்துக்கான பரிசோதனை ரீதியிலான படப்பிடிப்பு நடத்தப்பட்டதாம்.

இதற்காக ரஜினி புது தோற்றத்துடன் காட்சியளிக்கும் பல்வேறு புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல். ரஜினி தரப்பில் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனினும், அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் நிலவுகிறது.

இந்நிலையில், ரஜினி நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ‘தளபதி’ படம் வெளியானது. மணிரத்னத்தின் இயக்கம், இளையராஜாவின் இசை ஆகியவையும் கைகொடுத்ததால் ‘தளபதி’ வசூல் ரீதியில் பெரும் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளன்று ‘தளபதி’ படத்தை மறுவெளியீடு செய்துள்ளனர்.

இதனிடையே, ‘கூலி’ படம் குறித்த சில சுவாரசிய தகவல்களும் வெளியாகி உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முடிந்துவிடுமாம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்கு திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்தி வருவதாகப் பாராட்டியுள்ளார் ரஜினி. ‘கூலி’ படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் தேவா.

நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஷ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் ஆகியோரும் இப்படத்தில் உள்ளனர்.

ஹைதராபாத்தை அடுத்து, தற்போது ராஜஸ்தானில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

‘கூலி’ படத்தில் சண்டைக்காட்சிகள் அதிகம் இருக்கும் என்றும் அவற்றுள் ஒரு சண்டைக்காட்சியை ஜெய்பூர் நகரில் படமாக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

‘கூலி’ படம் முடிவடைந்த கையோடு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ பட வேலைகளை ரஜினி தொடங்க உள்ளார். ‘ஜெயிலர்’ படம் வெளியாகும் முன்பு நெல்சனின் திறமை மீது ரஜினிக்கு நம்பிக்கை இல்லை என்றும் கதையில் பல மாற்றங்களை செய்யுமாறு உத்தரவிட்டார் என்றும் தகவல் வெளியானது.

அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது, “ஒரு கதை வேண்டுமானால் தோற்கலாம். ஆனால் இயக்குநர் தோற்க மாட்டார்,” என்று குறிப்பிட்டு நெல்சனுக்கு ஆறுதல் அளித்தார் ரஜினி.

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக ‘ஜெயிலர்’ படம் வசூல் ரீதியில் சாதனை படைத்தது. இதையடுத்து, இரண்டாம் பாகத்துக்கு ரஜினி பச்சை கொடி காட்டியதாகவும் இயக்குநர் நெல்சன் தனது குழுவினருடன் கதை விவாதத்தில் ஈடுபட்டடுள்ளதாகவும் கூறப்படுகிறது.

‘ஜெயிலர்-2’ படத்துக்குப் பிறகு பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ரஜினி கால்ஷீட் தந்திருப்பதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

எனினும், அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த பிறகே அனைத்தும் உறுதியாகும் என்பதால், அதுவரை காத்திருப்போம், அதன் பின்னரே கொண்டாடுவோம் என்று ரஜினி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே ரஜினியின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

எல்லைகள் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் தனது நடிப்பாற்றலால் ரசிகர்களாக்கிக் கொண்ட ரஜினிகாந்த் திரையுலகில் வெற்றிகளைக் குவித்து வருவதாகவும் அவர் என்றும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ விழைவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

தனித்துவமான நடிப்பாற்றலால் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் ரஜினி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்