கடின உழைப்பும் தரமான இசையும் இருந்தால் வெற்றி உறுதி: ரேவா

கடின உழைப்பும் தரமான இசையும் இருந்தால் வெற்றி உறுதி: ரேவா

3 mins read
ee8e2db3-c557-4b0d-b932-6a85bac8976f
ரேவா. - படம்: விகடன்

ஆணாதிக்கம் மிகுந்த திரைத்துறையில் பெண்கள் சாதிப்பது அவ்வளவு எளிதல்ல என்பார்கள். அதற்காக சும்மா இருந்துவிட முடியுமா என்று களமிறங்கி ஓஹோ என்று சாதித்த பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் புதிய பெண் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்துள்ளார் ரேவா. இவரது இயற்பெயர் ரேவதி.

விஜய் சேதுபதி தயாரித்து, நடித்த ‘முகிழ்’ தான் இவரது அறிமுகப் படம். அதன் பின்னர் ‘அயலி’, ‘ஐந்தாம் வேதம்’ என இணையத் தொடர்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் அடுத்து சித்தார்த், கதிர் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தற்போது ‘ரௌடி & கோ’ படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு வேலை நடந்து வருகிறது.

“இசை என் மனத்துக்கு நெருக்கமானது. அதை ரசித்துச் செய்வது போன்ற ஒரு வேலை அமைவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனக்கு அத்தகைய ஆசிர்வாதம் அமைந்துள்ளது,” என்கிறார் ரேவா.

கொஞ்சமும் எதிர்பாராத வகையில்தான் இந்தத் துறைக்கு வந்தாராம். அதற்கு முன்பு வேறொரு துறையில், ஒரு வேலையில் இருந்தாராம்.

“எந்தத் துறையாக இருந்தாலும் சிரமப்படாமல் மேலே வர முடியாது என்பதுதானே உண்மை. சினிமா பின்னணி இல்லாமல் இங்கே வந்திருக்கிறேன். ஆனாலும், ‘அடுத்து ஒரு பெரிய வாய்ப்பு அமையும்’ எனும் உறுதியையும் நம்பிக்கையையும் மட்டுமே மனத்தில் நிறுத்தி இந்த இடத்தை வந்தடைந்துள்ளேன்,” என்று சொல்லும் ரேவா, கடின உழைப்போடு தரமான இசையையும் சேர்த்துக் கொடுத்தால், அந்த உழைப்பே தன்னை நல்ல இடத்துக்குக் கொண்டு சேர்க்கும் எனத் திடமாக நம்புகிறார்.

உடனடியாக பெரிய இசையமைப்பாளராகி விடவேண்டும், உடனே எல்லா ரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என்றெல்லாம் இவர் ஆசைப்படவில்லை.

சற்று காலமானாலும் பரவாயில்லை, உழைப்புக்குரிய, ரசித்து உழைத்ததற்கான பலன் கிடைத்தால் அதுவே போதுமானது எனப் பக்குவமாகப் பேசுகிறார்.

ரேவதியின் பூர்வீகம் பாலக்காடு. அம்மா வழி தாத்தா, மிருதங்க வித்வான் சேஷாமணி. அதனால் வீட்டில் எந்நேரமும் இசை இழையோடுமாம். சங்கீதங்களும் சங்கதிகளும் கேட்டு வளர்ந்ததால் இவருக்கும் இசை மீது இயல்பாகவே ஈர்ப்பு வந்துவிட்டது.

“நான் குழந்தையாக இருந்தபோதிலிருந்து எனக்கு சங்கீதம் கற்றுக்கொடுத்தனர். கலைகளில் அதிக ஈடுபாடு இருந்தது. நன்றாக ஓவியம் வரைவேன், கவிதைகள் எழுதுவேன், பாடுவேன். ‘ஃபேஷன் டிசைனிங்’ படிக்கும்போது சின்னச் சின்ன மெட்டுகளை உருவாக்கினேன். ஒருகட்டத்தில் படிப்பைவிட இசையில் ஈடுபாடு அதிகமானது. நேரம் போவதே தெரியாமல் இசையில் கவனம் செலுத்தினேன்.

“இடையே ஒரு வேலையில் இருந்தாலும், மனம் முழுவதும் இசையில்தான் இருந்தது. அதன் பிறகுதான் இசையையே முழுநேரத் தொழிலாகச் செய்ய முடிவெடுத்தேன். முதலில் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தேன். அது அப்படியே சினிமாவுக்கும் அழைத்து வந்தது,” என்கிறார் ரேவதி.

இளையராஜாவும் ஏ.ஆர். ரகுமானும்தான் இவரது மனம்கவர்ந்த இசையமைப்பாளர்கள். ஒருவகையில் குருநாதர்கள் எனலாம்.

குழந்தைப் பருவம் முதல் ரகுமானின் தீவிர ரசிகை. ரகுமானின் திரைப் பாடல்கள் அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளார். இளையராஜாவின் இசை நுணுக்கங்களை ஆழ மனத்தில் பதிய வைத்துக் கொண்டதால், அவரும்கூட தனக்கு மானசீக குரு என்கிறார்.

இது ஒரு மணி நேரப் படம்தான். விஜய் சேதுபதி தன் மகள் ஸ்ரீஜாவோடு சேர்ந்து நடித்திருக்கிறார். அவருக்கு ‘ஓயாத அலை போலே...’ பாடல் ரொம்பப் பிடிக்கும் என்றார்.

“முகிழ்’ படத்துக்குப் பிறகு ‘ஆசை’ படத்தில் ஒப்பந்தமானேன். இது கதிர், திவ்யபாரதி நடிக்கும் படம். அதற்கடுத்து பாஷன் (Passion) ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் நடிக்கும் ‘ரௌடி & கோ’வுக்கும் இசையமைக்கிறேன். அதே நிறுவனத்தின் அடுத்த படத்திற்கும் இசையமைக்கிறேன்,” என்று ரேவா வாசிக்கும் பட்டியல் பெரிதாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்