வெற்றி: நடிகனாக எனக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளன

வெற்றி: நடிகனாக எனக்கான பொறுப்புகள் அதிகரித்துள்ளன

3 mins read
69cc8846-31a7-4742-8208-1398a1d3abfa
நடிகர் வெற்றி. - படம்: ஊடகம்

மக்களுடைய கவனம் கிடைத்திருப்பது தமக்குப் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது என்றும் ஒரு நடிகனாக தமக்குரிய பொறுப்புகள் அதிகரித்துள்ளன என்றும் கூறுகிறார் நடிகர் வெற்றி.

‘8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ போன்ற ‘த்ரில்லர்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் வெற்றி. இப்போது காதல் கதைகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார். இவர் நடித்திருக்கும் ‘ஆலன்’ திரைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

“வெற்றி நடிக்கும் படம் என்றால் நல்ல கதை, வலுவான கதைக்களம் இருக்கும் என்று மக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த படம் இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பயம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

“இந்தப் பயத்தை நான் நல்ல விஷயமாகவே பார்க்கிறேன். ஓடிடி தளங்களில் என்னுடைய படங்களுக்கான வியாபாரம் நன்றாகவே உள்ளது. என்னுடைய சில படங்களை திரையரங்குகளில் ஒருதரப்பு ரசிகர்கள் மட்டுமே பார்க்கிறார்கள். பெரும்பாலானோர் ஓடிடி தளங்களில் பார்க்கின்றனர். குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ஓடிடி தளங்கள் மிகப் பெரிய உதவியாக உள்ளன,” என்கிறார் வெற்றி.

எப்போதும் அமைதியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பதாகப் பலரும் சொல்கிறார்களாம். அடுத்து ஒரு புதுப் படத்தில், கலகலப்பான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

“அந்தப் புதுப்படத்தின் பணிகளை ஜனவரி மாதம் தொடங்க உள்ளோம். மக்கள் தங்கள் விமர்சனங்களை வெளிப்படையாகச் சொல்வதை நான் நல்லதாகப் பார்க்கிறேன். என்னுடைய `8 தோட்டாக்கள்’, ‘ஜீவி’ படங்களில் எனது கதாபாத்திரங்கள் வேறு மாதிரி இருக்கும்.

“தற்போது நான் நடிக்கும் ‘பம்பர்’ படத்தில் எனது கதாபாத்திரம் வேறு மாதிரி இருக்கும். நடிகருக்கு இந்தப் பன்முகத்தன்மை நிச்சயமாக தேவையானது.

“எனக்கு ‘ஜீவி’ படத்துக்குப் பிறகு ‘கேர் ஆஃப் காதல்’ என்ற ஒரு காதல் கதையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு தெலுங்கு படத்தின் மறுபதிப்பு.

“இன்னும் பெரிய இயக்குநர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒருவேளை அவர்களிடம் என்னைப் பற்றி யாராவது எதிர்மறையாக ஏதும் சொல்கிறார்களா எனத் தெரியவில்லை.

“இப்போது இரண்டு பெரிய படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். அவற்றுள் ஒரு படம் குறித்து வெளிப்படையாக இப்போது ஏதும் சொல்ல முடியாது. அடுத்தது, நானும் பிரபு தேவா மாஸ்டரும் இணைந்து ஒரு இணையத்தொடரில் நடித்து வருகிறோம். அது பெரிதாகப் பேசப்படும் என நம்புகிறேன்,” என எதிர்பார்ப்புகளுடன் பேசுகிறார் வெற்றி.

கடந்த சில ஆண்டுகளாக வெளியான பெரும்பாலான தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டதாகச் சொல்பவர், ஒரு கதையைப் படிக்கும்போது தாம் இதுவரை பார்த்த படங்களில் இருந்து எந்த வகையில் இந்தக் கதை வேறுபட்டு இருக்கிறது என்றுதான் முதலில் கவனிப்பாராம்.

“அடுத்ததாக, எந்த இடத்திலும் அயர்ச்சி அடைய வைக்காமல் முழுமையாக அந்தக் கதை என்னை நகர்த்திக் கொண்டு போனால் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட இயக்குநரை அழைத்துப் பேசிவிடுவேன்.

“எனக்கு ‘த்ரில்லர்’ கதைகள் மட்டுமே பிடிக்கும் என்பது தவறு. அப்படியான படங்களில் தொடர்ந்து நடிப்பதால் மக்கள் அப்படி நினைக்கின்றனர்.

“பொதுவாக நகைச்சுவைப் படங்களைத்தான் அதிகம் விரும்பிப் பார்ப்பேன். ‘பஞ்சதந்திரம்’ திரைப்படம்தான் எனக்கு ஆகப் பிடித்தமான படம்.

“வணிக ரீதியிலான படங்களில் நடிக்க வேண்டும் என்ற விருப்பமும் நோக்கமும் எனக்கும் உள்ளது. ஒரு நல்ல கதையை இயக்கும்போது இயக்குநருக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

“ஆனால், தயாரிப்பாளருக்கு உரிய லாபம் வந்திருக்காது. அப்படியான படங்கள் ஓடினால்தான் அந்த இயக்குநருக்கும் அந்த நடிகருக்கும் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கும். அது இல்லாததுதான் வருத்தமடைய வைக்கிறது.

“இயக்குநர் சீனு ராமசாமியும் நடிகர் ரஜினியும் பாராட்டியதை என்னால் மறக்கவே இயலாது. ‘உங்களுடைய கண்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவற்றை நன்றாகப் பயன்படுத்தலாம். தொடர்ந்து நல்ல படங்களில் நடியுங்கள்’ என்று சீனு ராமசாமி சார் கூறினார். அது எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது.

“அதேபோல் ‘8 தோட்டாக்கள்’ படம் வெளியான சமயத்தில் சூப்பர் ஸ்டார் அழைத்துப் பாராட்டினார். இதுபோன்ற பாராட்டுகள்தான் ஒரு நடிகனுக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கும் என்பார்கள். என் விஷயத்திலும் அதுதான் நடந்தது,” என்கிறார் வெற்றி.

குறிப்புச் சொற்கள்