திரைப்படத்துறையில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோரின் வாரிசுகள் திரையுலகில் சாதிக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஆனால், சில பிரபலங்களின் வாரிசுகள் சத்தமே இல்லாமல் மற்ற துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர்.
வேதாந்த் மாதவன்
தமிழ்த் திரையுலகில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கினாலும், இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து மொழி ரசிகர்களாலும் அறியப்படும் பிரபலங்களில் ஒருவர் நடிகர் மாதவன். தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருக்கும் அவர், தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.
இப்படி பன்முகக் கலைஞராக உள்ள மாதவனின் மகன் வேதாந்த் தனது தந்தையைப் போலவே நடிக்கவருவார் என ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தபோது அவரது கவனம் நீச்சல் பக்கம் திரும்பியது.
பள்ளி நீச்சல் குளத்தில் தொடங்கிய அவரது பயணம், தற்போது ஒலிம்பிக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
மகனின் கனவைத் தன் கனவாக எடுத்துக்கொண்ட மாதவன் அதற்கான அனைத்து முயற்சிகளிலும் மகனுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். மாநிலப் போட்டிகள், தேசியப் போட்டிகள் ஆகியவற்றில் சாதித்த வேதாந்த், தற்போது அனைத்துலகப் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்து வருகிறார்.
வேதாந்தின் அடுத்த இலக்கு, ஒலிம்பிக். இதற்காக துபாயில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மகனுக்காக மாதவன் துபாயிலேயே குடியேறி அவரை ஊக்கப்படுத்தி வருகிறார்.
ஸ்ருதன் ஜெய் நாராயணன்
பலகுரல் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் நாடகங்களில் நடித்து, திரையுலகில் நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கியவர் சின்னி ஜெயந்த். ஆனால், அவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணனின் கனவு மாவட்ட ஆட்சியர் ஆவது.
திரைத்துறை பக்கம் கவனத்தைத் திருப்பாமல் படிப்பிலேயே கவனம் செலுத்திவந்த ஸ்ருதன், 2019ஆம் ஆண்டு நடந்த இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வில் தேசிய அளவில் 75வது இடத்தைப் பிடித்தார். மத்திய அரசின் திறன் மேம்பாட்டுத்துறை உதவிச் செயலாளராகப் பணிபுரிந்த அவர், தற்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியராக உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஜெயவீணா
தமிழ்த் திரையுலகில் குணச்சித்திர நடிகராக வலம்வருபவர் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா. நீச்சல் வீராங்கனை ஆக வேண்டுமென்பது இவரது கனவு.
தன் மகளின் ஆர்வத்திற்காகவே அவர் கலந்துகொள்ளும் போட்டிகளில் ஒரு தந்தையாக உடன் செல்ல வேண்டியிருந்ததால் தன்னுடைய பல திரைப்படங்கள், சின்னத்திரை வாய்ப்புகளைத் தவிர்த்து வந்தார் தலைவாசல் விஜய். உள்ளூர் போட்டிகளில் பதக்கம் குவித்த இவர், தேசியப் போட்டிகளிலும் வெற்றியைக் குவித்தார்.


