2026 பொங்கல் பந்தயத்தில் திடீர் திருப்பம்: சத்தமில்லாமல் சாதித்த ஜீவா

2 mins read
cf7dddcb-cd17-4cc2-a54b-ac818646180d
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் ஜீவா தோன்றும் காட்சி. - படம்: இந்து தமிழ் திசை

2026ஆம் ஆண்டு பொங்கல் திரைப்பட வெளியீட்டுப் போட்டியில், பெரிய எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி வெளியான நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம், தற்போது ரசிகர்களின் பேராதரவுடன் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியான நிலையில், நடிகர் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் எந்த ஆரவாரமும் இன்றித் திரைக்கு வந்தது. ஆனால், படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களின் நேர்மறையான விமர்சனங்களால் படத்தின் போக்கு முற்றிலுமாக மாறியுள்ளது.

வசூல் ரீதியாகச் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படம் முன்னிலை வகித்தாலும், விமர்சன ரீதியாக மக்களின் மனத்தை வென்று ஜீவாவின் படமே இந்தப் பொங்கலின் ‘அமைதியான வெற்றியாளராக’ உருவெடுத்துள்ளது.

முதல் இரண்டு நாள்களில் இப்படம் சுமார் 4 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும், கார்த்தி நடிப்பில் வெளியான ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் வசூலை இப்படம் விரைவில் முந்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நாளை விட, இரண்டாம் நாளில் இப்படத்தின் வசூல் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றன. இதன் மூலம் 2026ஆம் ஆண்டின் முதல் வசூல் வெற்றிப் படம் என்ற பெருமையை இப்படம் பெறும் சூழல் உருவாகியுள்ளது.

தனது படத்திற்குக் கிடைத்துள்ள இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந்த நடிகர் ஜீவா, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர், “என் அன்பான மக்களே! நீங்கள் காட்டிய அளவற்ற அன்பால் நான் மெய்சிலிர்த்துப் போயுள்ளேன். உங்களின் விமர்சனங்களும் என் மீது உருவாக்கப்பட்ட நகைச்சுவைச் சித்திரங்களும் எனக்குப் பெரும் உற்சாகத்தையும் ஆதரவையும் அளித்துள்ளன. இந்தப் பயணத்தைச் சிறப்பாக்கிய அனைவருக்கும் நன்றி. படத்தைத் திரையரங்குகளில் மட்டும் கண்டு மகிழுங்கள்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தரமான கதைக்களத்துடன் வரும் படங்கள் என்றுமே தோற்பதில்லை என்பதை ஜீவாவின் இந்த வெற்றி மீண்டும் நிரூபித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்