ஒரு காலத்தில் திரிஷாவுக்கு இணையாகப் பேசப்பட்டவர் சுனைனா.
அறிமுகமான புதிதில் சில வெற்றிப் படங்களில் நடித்த அவர், பின்னாள்களில் திரிஷாவின் இடத்தைப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவரது கெட்ட நேரமோ என்னவோ, சொந்த வாழ்க்கையில் அவர் எடுத்த சில முடிவுகள் திரையுலகில் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்திவிட்டன. அதன் பிறகு அவரை நல்ல படங்கள் எதிலும் காணவில்லை. கடைசியாக ‘குபேரா’ படத்தில் நாகார்ஜுனாவின் மனைவியாக நடித்து மனதைத் தொட்டார் சுனைனா.
ஓய்வு கிடைத்தால் போதும். சமூக ஊடகங்களில் விறுவிறுப்பாகப் பதிவுகளை வெளியிடுகிறார். அந்த வகையில், அண்மையில் ஒரு ரசிகர் இவரிடம் வாங்கிக்கட்டிக் கொண்டுள்ளார்.
‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் அனுஷ்கா தன் உடற்கட்டை, தோற்றத்தை மாற்றி அமைத்ததுதான் அவருக்குப் பெரிய சறுக்கல் ஆகிவிட்டது என்று அந்த ரசிகர் சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள சுனைனா, “இதனால் அவரது மவுசு ஒன்றும் குறையவில்லை. இப்போதும் அழகாகத்தான் இருக்கிறார். முதலில் ஒரு நடிகையை எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதற்கான உங்கள் பார்வையை மாற்றுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார் சுனைனா.
ஒரு கலைஞரின் திறமையை விமர்சிக்கலாம் என்றும் ஆனால் தன் திறமையை வெளிப்படுத்தத் தேர்ந்தெடுக்கும் வழிமுறையை, அவருக்குள்ள சுதந்திரத்தை யாரும் விமர்சிக்க முடியாது என்றும் சுனைனா கோபத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவைக் கண்ட நடிகைகள் பலர், ‘அருமையான கருத்து’ எனக் குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.