சிங்கப்பூர்த் தமிழர்களின் பேராதரவிற்கு நன்றி: இயக்குநர் கதிர்

2 mins read
c17b81fd-760e-4407-8bbf-316a4a071a83
தம்முடன் பணியாற்றிய இயக்குநர்கள் வெற்றிமாறன், மி‌ஷ்கின் உள்ளிட்ட பலரும் தற்போது வெற்றிகரமாக இயங்குவதைப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகக் கூறினார் இயக்குநர் கதிர். - படம்: த. கவி

செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம் என எல்லா வளர்ச்சியும் மனிதப் படைப்பாற்றல் இருந்தால்தான் முழுமையடையும், அதற்கு திரைத்துறையும் விதிவிலக்கன்று என்கிறார் திரைப்பட இயக்குநர் கதிர்.

இதயம், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் என 90களின் இறுதியில் திரைத்துறையில் காதல் படங்களைக் கொடுத்து ஆதிக்கம் செலுத்தியவர் இவர்.

அண்மையில் சில ஆய்வுகளுக்காகச் சிங்கப்பூருக்கு வருகைபுரிந்த திரு கதிர், தமது திரைத்துறைப் பயணம், திரைத்துறை மாற்றங்கள், எதிர்காலத் திட்டங்கள் எனப் பலவற்றையும் குறித்து தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார்.

“சிங்கப்பூர்த் தமிழர்கள் மொழி மீதும் தமிழ்த் திரையுலகின் மீதும் பேரன்பு கொண்டுள்ளதை உணர்கிறேன். அவர்கள் எங்கள் படங்களுக்குத் தரும் பேராதரவுகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்,” என்றார் இவர்.

அடிப்படையில் தாம் ஓவியர் என்பதால் மென்மையும் படைப்பாற்றலும் தமக்குள் நிறைந்துள்ளதைச் சுட்டிய திரு கதிர், காதல் படங்களை எடுப்பதே தமது இயல்பு என்றும் சொன்னார்.

“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான தொழில்நுட்பப் புரட்சிகள் இடம்பெறும். அவற்றைக் கையிலெடுப்பது வேலைப்பளுவைக் குறைத்து சிந்தனைக்கு உயிரூட்டும் கருவியாக அமைய வேண்டும்,” என்கிறார் இவர்.

“எல்லா புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் காணும்போது அவற்றைக் கண்டு ஒதுங்கும் பழக்கத்தை விடவேண்டும். நம்மைக் கடந்து செல்லும் சிறுகீற்றும் பெருமாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே அவற்றைக் கற்று தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படவேண்டும்,” என்பது இயக்குநர் கதிரின் அறிவுரை.

தற்போது, திறமையை வெளிக்காட்டி வாய்ப்புகள் தேட ஊடகத் தளங்களும் படங்களை வெளியிட ‘ஓடிடி’ தளங்களும் வந்திருப்பது சிறப்பானது என்ற இவர், “தளங்கள் எத்தனை வந்தாலும் திறமைதான் வெல்லும் என்பதையும் புதிதாக திரைத்துறைக்குள் வருவோர் நினைவில்கொள்ள வேண்டும்,” என்று அறிவுறுத்தினார்.

தமது திரைப்படங்கள் குறித்துப் பேசிய இவர், காதல், அதன் பின்னால் உள்ள மென்மையான உணர்வு, மனப் போராட்டம் ஆகியவற்றைத் தமது படங்கள் பேசும் என்றும், வன்முறையைக் காட்டும் திரைப்படங்களை எடுக்கத் தாம் விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

தமது கதாபாத்திர வடிவமைப்புகள் பெரும்பாலும் தமது உண்மை வாழ்வில் தம்மைக் கவர்ந்த மனிதர்களிடமிருந்து எடுக்கப்பட்டதாகத் திரு கதிர் கூறினார். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் நடை, உடை, மிடுக்கு என அனைத்தையும் நுட்பமாக கவனித்து எழுதுவது தமது வழக்கமென்றும் அவர் சொன்னார்.

புதிய திரைப்படங்களை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகச் சொன்ன இவர், திரைப்படங்களுக்கான பதாகை வடிவமைக்கும் பணியில் தொடங்கிய தமது நீண்ட பயணம், தற்கால காதலை வெளிப்படுத்தும் படங்கள் எடுக்கும்வரை நீண்டுள்ளதில் மகிழ்ச்சி என்றார்.

தற்போது, ‘வாட்ஸ்அப் டீபி’ எனும் தமது புதிய திரைப்படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வரும் திரு கதிர், “திரைத்துறையில் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் இடையிலான காத்திருப்பு இயல்பானது. அது படைப்புக்கான பணிகளில் ஈடுபட வழிசெய்கிறது,” என்றார்.

திரைத்துறைக் கோட்டைக் கதவுகள் புதிய திறமைகளுக்காக எப்போதும் திறந்துள்ளதாகக் கூறும் இவர், திறமையும் ஆர்வமும் கொண்டோர் அதனை மெருகேற்றிக்கொண்டு முயன்றால் உறுதியாக வெற்றி பெறலாம் என்றும் ஊக்கமளித்தார்.

குறிப்புச் சொற்கள்