நான்கு தலைமுறைகளாக நீடித்த பகைக்கு முற்றுப்புள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்

நான்கு தலைமுறைகளாக நீடித்த பகைக்கு முற்றுப்புள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்

2 mins read
eece5449-3b52-48ff-979d-408a20293040
உச்ச நீதிமன்றம். - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

புதுடெல்லி: ஒரே ஒரு நிலத்திற்காக ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறையினர் ஏறக்குறைய 70 ஆண்டுகளாகப் போராடி வந்த வழக்கின் தொடர்பில், உச்ச நீதிமன்றம் தற்போது இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 59 ஆண்டுகளாக நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்பட்டு வந்த இந்த நிலத் தகராறு வழக்கு, இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம், ஹரித்துவார் பகுதியில் உள்ள 15.5 பிகா (சுமார் 2.4 ஏக்கர்) நிலம்தான் இந்த போராட்டங்களுக்கும் சண்டைகளுக்கும் காரணம்.

கடந்த 1957ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி, ‘சராபத் அலி’ என்பவரின் முன்னோர்கள் இந்த நிலத்தை முறைப்படி பணம் கொடுத்து, விற்பனைப் பத்திரம் மூலம் வாங்கியுள்ளனர்.

ஆனால், இந்த நிலத்தில் எங்களுக்கும் பங்கு உள்ளது எனக் கூறி, சராபத் அலியின் சொந்த உறவினர்களே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

நான்கு தலைமுறை பகை

தாத்தா காலத்தில் தொடங்கி, மகன், பேரன் எனத் தாண்டி நான்கு தலைமுறைகளாக இந்தக் குடும்பச் சண்டை சட்டப் போராட்டமாக நீடித்து வந்தது.

இந்த வழக்கை இறுதி விசாரணை செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த்குமார் மிஸ்ரா, என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, சராபத் அலிக்கு ஆதரவாக அதிரடி தீர்ப்பு வழங்கியது:

“1957ல் பதிவு செய்யப்பட்ட அசல் விற்பனைப் பத்திரம் முற்றிலும் செல்லுபடியாகும். சர்ச்சைக்குரிய அந்த நிலம் முழுவதும் சராபத் அலிக்கே சொந்தம். அதை அவரே முழுமையாக அனுபவிக்கலாம்,” என்று தீர்ப்பளித்தனர்.

முன்னதாக, நிலப் பத்திரத்தில் இருந்த ஒரு சாட்சியின் முகவரியில் ஏற்பட்ட சிறிய எழுத்துப் பிழையைக் காரணம் காட்டி, அசல் பத்திரத்தையே கீழ் நீதிமன்றங்கள் செல்லாது என அறிவித்திருந்தன.

கீழ் நீதிமன்றங்களின் இந்த நடவடிக்கையை ‘வெளிப்படையான தவறு’ எனக் கண்டித்த உச்ச நீதிமன்றம், இந்த நீண்டகாலப் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

குறிப்புச் சொற்கள்