தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பழைய நினைவுகளில் சூரி

2 mins read
4dc77c2f-235b-44c8-9da4-4f3041a78057
நடிகர் சூரி, தற்போது ‘மாமன்’ படத்தில் நடித்து வருகிறார். - படம்: ஊடகம்

நடிகர் சூரி, தற்போது ‘மாமன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் நடந்து வருகிறது.

படப்பிடிப்பிற்காக சூரி தங்கி இருக்கும் அறைக்கு எதிரில் கட்டட வேலை ஒன்று நடந்து வருகிறது.

இந்நிலையில், அந்தக் கட்டடத்திற்கு சாயம் பூச ஒருவர் சுவரில் தொங்கியபடி சாயம் அடித்துக் கொண்டிருந்தார். அதைக் கண்ட சூரி, உடனடியாக அதைக் காணொளி எடுத்தார்.

பின்னர் ‘விடாமுயற்சி’ படத்தில் உள்ள ‘விடாமுயற்சி’ பாடலுடன் அந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் சூரி பதிவு செய்தார்.

“சுவர்களில் நிறத்தை அன்று பதித்தேன். இன்று திரையில் உணர்வுகளைப் பதிக்கிறேன்” என்று சூரி பதிவிட்டார்.

நடிகர் சூரி சினிமாவுக்கு வருவதற்கு முன் கட்டடங்களுக்கு சாயம் பூசும் வேலையில் ஈடுபட்டவர். அதை இப்போது தமது சமூக ஊடகப் பதிவு மூலம் சூரி நினைவு கூர்ந்துள்ளார்.

சூரியின் காணொளியை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்வையிட்டனர். அவரை பாராட்டியும் வருகின்றனர்.

படிப்படியாக முன்னேற்றம்

சினிமாவிலும் சூரி பல தடைகளை தாண்டி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியவர்.

சிறுசிறு வேடங்கள், தயாரிப்புப் பணிகளில் நாள் சம்பளத்திற்கு வேலை, நகைச்சுவைக் காட்சிகளில் வருவது, பின்னர் முழுநேர நகைச்சுவை நடிகராக மாறியது என சூரி தமது திரை வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்தார்.

தற்போது சூரி முழுநேர நாயகனாக மாறி வருகிறார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு ஆண்டுக்கு முன்னர் ‘விடுதலை- பாகம் 1’ படம் வெளியானது. அதில் சூரி நாயகனாக நடித்தார்.

இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் இரண்டாவது பாகமும் வெற்றி பெற்றது.

சூரி, பி.எஸ்.வினோத்­ராஜ் இயக்­கிய ‘கொட்­டுக்­காளி’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதை நடி­கர் சிவ­கார்த்­தி­கே­யன் தயா­ரித்தார். ‘கருடன்’ படத்திலும் சூரி நாயகனாக அசத்தினார்.

அதையடுத்து இனி வரும் படங்களில் கதையின் நாயகனாகவே எனது பயணம் இருக்கும்,” என்று சூரி அண்மையில் கூறியிருந்தார்.

“மேலும் நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து நடிக்கத் தயார். ஆனால், அந்தப் படத்தில் யார் கதாநாயகன் என்பது சிவகார்த்திகேயன்தான் முடிவு செய்ய வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

“எனக்கு எப்போதும் என் தம்பி சிவகார்த்திகேயன்தான் ஹீரோ,” என்றும் சூரி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்