தனியார் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி கலந்து கொண்டார்.
அப்போது சிறப்பாக நடனமாடிய நடனக் கலைஞர் பஞ்சமி நாயகி என்பவரிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் உள்ளனர் என்றும் அவர்களுக்குக் காதணி விழா நடத்தி விட்டீர்களா என்றும் அவர் கேட்டார்.
அதற்கு இல்லை என பஞ்சமி கூறவே, உங்கள் பிள்ளைகளுக்கு நான் தாய் மாமனாக இருந்து காதணி விழாவை நடத்தி வைக்கிறேன் என சூரி வாக்குக் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், நடனக் கலைஞர் பஞ்சமி நாயகியின் பிள்ளைகளுக்குக் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சந்தவேலூர் பகுதியில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் காதணி விழா மே 23ஆம் தேதி நடந்தது.
இதில், நடிகர் சூரி கலந்துகொண்டு, தாய்மாமன் சீர்வரிசை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான படங்கள் வெளியாகி இணையத்தில் பரவி வருகின்றன. சூரி நடித்த ‘மாமன்’ படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் நிஜவாழ்விலும் மாமனாக மாறி சீர்வரிசை செய்திருப்பதாக சூரியை பாராட்டுகின்றனர்.
இதற்கிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சூரி, “லோகேஷ் கனகராஜ் படத்தில் நான் நடிக்கவில்லை. நடிக்க வேண்டும் என்பது எமது ஆசை. விஜய், உதயநிதி இருவரும் எனக்கு வேண்டியவர்கள்தான்,” என்று தெரிவித்தார்.
இதன்மூலம் லோகேஷ் இயக்கத்தில் சூரி நடிக்கவிருப்பதாகப் பரவிவந்த தகவலுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.