விஜய் வழியில் சூர்யா; உற்சாகப் பாதையில் ரசிகர்கள்

3 mins read
dfe29858-a861-459f-addc-ca32d629d4d6
சூர்யா. - படம்: பின்ட்டரெஸ்ட்

முன்பெல்லாம் தான் நடிக்கும் ஒரு படம் வெளியாகும் முன்பே அடுத்து நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் விஜய்.

ஒரு கட்டத்தில் அனைத்து முன்னணி நாயகர்களும் இந்த வழக்கத்தை பின்பற்றத் தொடங்கினர்.

அந்த வகையில் தற்போது தமது அடுத்த படமான ‘சூர்யா 47’ குறித்த அறிவிப்பை வெளியிட்டு பூசையுடன் பட வேலைகளைத் தொடங்கியுள்ளார் சூர்யா.

சூர்யாவின் இந்த உற்சாக அறிவிப்புக்கு காரணம் ‘கருப்பு’ திரைப்படம் தான்.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ படத்தையடுத்து வெங்கி அட்லூரி, ஜித்து மாதவன் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடிக்கிறார் சூர்யா.

‘கருப்பு’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷாவும் மற்ற முக்கியமான கதாபாத்திரங்களில் சுவாசிகா, அனகா, ஷிவதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முதல் முறையாக சூர்யா படத்துக்கு இசையமைக்கிறார் சாய் அபயங்கர்.

எதிர்வரும் ஜனவரி 23ஆம் தேதி திரைகாணும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாகவே இப்படத்தில் சூர்யா பயன்படுத்தும் கறுப்பு சட்டை, வேட்டி, ‘கருப்பு’ படத்தின் சின்னத்துடன் விற்பனைக்கு வந்திருக்கிறது.

இதனிடையே வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஊட்டி மற்றும் ஹைதராபாத்தில் நடந்துள்ளது.

இதில் மமிதா பைஜு, ரவீணா டாண்டன், ராதிகா, பவானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி, தலைப்பு ஆகிய விவரங்கள் எதிர்வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் ஸ்டைலான சூர்யாவைப் பார்க்க முடியுமாம்.

சில இயக்குநர்கள் பிரம்மாண்டத்தை நம்பி, தங்கள் படத்தில் உணர்வுபூர்வமான அம்சங்களில் கோட்டை விடுவார்கள்.

ஆனால், வெங்கி அட்லூரியைப் பொறுத்தவரை ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ என அவரது படங்களில் உணர்வுபூர்வமான காட்சிகள்தான் நிற்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

கார்த்தியைப் பொறுத்தவரை ‘ஜப்பான்’ படத்தின் தோல்விக்குப் பிறகு கதைத் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தினார். அதே வழியை தற்போது சூர்யாவும் பயன்படுத்துகிறாராம்.

ஒரே ஆண்டில் இரண்டு, மூன்று படங்களை கொடுக்க உள்ளார். தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘கருப்பு’ படம் அடுத்த ஆண்டு தொடக்கத்துக்குச் சென்றுவிட்டது.

திட்டமிட்டபடியே ‘கருப்பு’ படப்பிடிப்பு முடிவுக்கு வரும்போது ‘சூர்யா 46’ படத்தைத் தொடங்கியவர், இப்போது அதை முடித்து ‘சூர்யா 47’க்கு வந்திருக்கிறார்.

சூர்யா ஆண்டுதோறும் இரண்டு படங்களிலாவது நடிக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம்.

இதை நிறைவேற்ற முடிவு செய்துவிட்டாராம். அதனால்தான் அண்மையில் தன் ரசிகர்களைச் சந்தித்தபோது, இனி ஒவ்வோர் ஆண்டும் இரண்டு படங்களிலாவது நடிப்பதை உறுதி செய்தார்.

ரசிகர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அசுர வேகத்தில் உழைக்கிறாராம். அதன் பலனாக அடுத்த ஆண்டு அவரது நடிப்பில் மூன்று படங்கள் திரை காண உள்ளன.

இதனால் சூர்யா ரசிகர்களிடமும் மும்மடங்கு உற்சாகத்தைக் காண முடிகிறது.

இதனிடையே, ‘சூர்யா 47’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

காவல் அதிகாரியாக நடித்த ‘காக்க காக்க’, ‘சிங்கம்’ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெற்றதால் புதுப்படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்