‘அகரம்’ அறநிறுவனம் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அதை நிறுவிய நடிகர் சூர்யா அண்மையில் பிரம்மாண்டமான விழா ஒன்றை நடத்தினார்.
அந்த அறநிறுவனம் மூலமாகப் பயனடைந்த மாணவர்கள் பலரும் அதில் கலந்துகொண்டு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தனர்.
சமூக ஊடகங்களில் அந்த நிகழ்ச்சி தொடர்புடைய சில காணொளிகள் பகிரப்பட்டன. அதனுடன் சூர்யா அரசியலுக்கு வரவிருக்கும் தகவலும் காட்டுத்தீ போல் பரவியது.
அந்தத் தகவல்களையெல்லாம் நடிகர் சூர்யாவின் தலைமை நற்பணி இயக்கம் மறுத்துள்ளது.
“வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சூர்யா போட்டியிடப் போகிறார் எனும் பொய்யான செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அத்தகவல் போலியானது மட்டுமன்றி, சூர்யாவின் கொள்கைகளுக்கு முரணானது,” என அது தெரிவித்துள்ளது.
“கலை உலகத்திலும் அகரம் அறக்கட்டளை தொடர்புடைய விவகாரங்களிலும் மட்டுமே சூர்யா தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அரசியலுக்கு வரும் எண்ணம் அவருக்கு இல்லை,” என நற்பணி இயக்க நிர்வாகிகள் கூறினர்.