நடிகர் சூர்யாவின் 47வது படம் பூசையுடன் தொடங்கியது.
தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் ‘கறுப்பு’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதில் அவருக்கு ஜோடி திரிஷா.
இந்நிலையில், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. அதை உறுதி செய்யும் விதமாக, சென்னையில் கடந்த 7ஆம் தேதி இப்படத்தின் பூசை நடைபெற்றது.
இதில், சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா ஒப்பந்தமாகி உள்ளார். ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப் பிறகு நஸ்ரியா நாயகியாக நடிக்கும் தமிழ்ப் படம் இது.
மேலும் நஸ்லென், ஜான் விஜய், ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் இந்தப் புதுப் படத்தில் நடிக்கிறார்கள். நடிகை ஜோதிகாவின் ‘ழகரம் ஸ்டூடியோ’ தயாரிக்கிறது.
‘‘இந்தப் படத்தை இளையர்கள் கொண்டாடும் சிறந்த பொழுதுபோக்குப் படமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். சூர்யாவை இதுவரை பார்த்திராத துடிப்பான கதாபாத்திரத்தில் ரசிகர்கள் பார்க்கப்போவது உறுதி,” என்கிறது தயாரிப்புத் தரப்பு.

