கோவை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான சூர்யா, ஏற்கெனவே வெற்றிகரமாக இயங்கி வரும் ‘2டி என்டர்டெயின்மண்ட்’ தயாரிப்பு நிறுவனத்துடன் தற்போது மேலும் ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூர்யா 1997ஆம் ஆண்டு ‘நேருக்கு நேர்’ படத்தில் அறிமுகமானார். பிறகு, ‘நந்தா’ (2001), ‘காக்க காக்க’ (2003), ‘கஜினி’ (2005), ‘வாரணம் ஆயிரம்’ (2008) போன்ற படங்கள் அவரை ஒரு முன்னணி நடிகராக மாற்றின.
இதில், ‘சிங்கம்’ (2010) படம் பெரிய வெற்றியைப் பெற்று, பின்னால் ‘சிங்கம் II’ மற்றும் ‘சி3’ எனத் தொடர் படங்களாக வந்தன.
சூர்யாவின் திறமைக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம், ‘சூரரைப் போற்று’ (2020) படத்துக்காக அவர் வென்ற தேசிய விருது ஆகும். சமூக அக்கறை கொண்ட ‘ஜெய் பீம்’ (2021) படமும் உலக அளவில் அவருக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது.
இந்நிலையில், சூர்யா ‘2டி என்டர்டெயின்மண்ட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ‘36 வயதினிலே’, ‘மகளிர் மட்டும்’ போன்ற படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.
தற்போது சூர்யா புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ‘ழகரம்’ எனப் பெயரிடப்பட்டதாகக் கூறப்படும் இந்த தயாரிப்பு நிறுவனம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய நிறுவனமான ‘ழகரம்’ நிறுவனத்தின் முதல் படமாக, மலையாளத்தில் வரவேற்பை பெற்ற ‘ரோமஞ்சாம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கவுள்ள ஒரு படத்தையும் ‘ழகரம்’ தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகராக மட்டுமன்றி, தயாரிப்பாளராகவும் தரமான திரைப்படங்களை வழங்கும் அவரது முயற்சி தமிழ்த் திரையுலகில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே நிலவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
புதிய தயாரிப்பு நிறுவனம் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.