தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரையில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்: இயக்குநர் சங்கர்

3 mins read
660718e3-86f4-468c-b65b-b6ab20ede166
‘கேம் சேஞ்சர்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியீடு காண உள்ளது.

உலகெங்கும் உள்ள இந்திய சினிமா ரசிகர்கள் இப்பட வெளியீட்டுக்காக மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

“இந்தப் படம் உருவாகியுள்ள விதம் மிகுந்த மன நிறைவைத் தருகிறது. நாயகன் ராம்சரணின் தோற்றம், நடிப்பு, வசன உச்சரிப்பு, நடனம், சண்டை, ஸ்டைல் என அனைத்து வகையிலும் பிரமாதமாக பங்களித்துள்ளார். அவரது இந்த மெனக்கெடல் எனக்கான பொறுப்பையும் அதிகரித்துவிட்டது.

“ஒவ்வொரு காட்சியிலும் அதிரடி, வேகம், புத்திசாலித்தனம் தெறிக்கும் வகையில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளேன். நல்ல கதை, பிரம்மாண்ட உருவாக்கம் ஆகியவற்றுக்கு மத்தியில் பல வணிக ரீதியிலான அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கும்,” என்கிறார் இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநர் சங்கர்.

இது சமூகம் சார்ந்த அரசியல், அதிரடிப்படம்தானாம். நேர்மையான அரசு அதிகாரிக்கும், அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் பெரும் போராட்டமாக கதை விரிவடையும்.

அரசின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும், ஒவ்வோர் அதிகாரியின் கடமைகள் என்னென்ன, அவரது அதிகார எல்லைகள் எவ்வாறு வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையெல்லாம் காட்சிகள் சுவாரசியமாக விவரிக்குமாம்.

“ஒரு பரபரப்பான படமாக இது உருவாகியுள்ளது என்பதே என் கணிப்பு. எந்த தனி மனிதனும் இதில் தம்மைப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும்.

“ராம் சரண் போன்ற பெரிய நடிகரும் இருக்கிறார். தெலுங்கில் அவரது ரசிகர் கூட்டத்துக்கு என நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அதையெல்லாம் நல்லவிதமாக நிறைவேற்ற இருப்பதாக நம்புகிறேன்,” என்கிறார் சங்கர்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் கதைதான் ‘கேம் சேஞ்சர்’ படமாக மாறியது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கக்கூடும்.

கொரோனா காலகட்டத்தில் ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளிவந்த ‘வேள்பாரி’ என்ற கதையை வாசிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்ததாம். உடனடியாக அக்கதையின் உரிமையைப் பெற்று திரைக்கதையை எழுத ஆரம்பித்துள்ளார் சங்கர்.

“கொரோனா காலகட்டத்தில் பல இயக்குநர்கள் இணையம் வழி குழு அமைத்து பேசிக் கொண்டிருந்தோம். அதன் பின்னர், பட இயக்குநர்கள் நெருங்கிய நண்பர்களாக மாறிப்போனோம்.

“ஒருமுறை நல்ல கதை இருந்தால் கூறுமாறு கேட்டிருந்தேன். அப்போது இயக்குநர் லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜிடம் நல்ல கதை இருக்கிறது என்றார். கதை கேட்டதும் பிடித்துப்போனது. அதுதான் இப்போது ‘கேம் சேஞ்சர்’ படமாக உருவாகியுள்ளது,” என்று சொல்லும் சங்கர், ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளியாவதற்கு முன்பே ‘கேம் சேஞ்சர்’ படம் எடுப்பது உறுதியாகிவிட்டதாகக் கூறுகிறார்.

“இப்படத்தின் தயாரிப்பாளர் ‘தில்’ ராஜுதான், இப்படத்தில் ராம்சரண் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்றாராம். மிகச் சிறந்த நடிகர் என்று சங்கர் பாராட்டுகிறார்.

“அவர் எப்போதுமே தனது சக்தியை தனக்குள் கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகத் தோன்றும். எப்போது வெடிப்பார் என்பதை எளிதில் கணிக்க முடியாதது போலவே காட்சியளிப்பார்.

“எந்தக் காட்சியாக இருந்தாலும் அதை அழகாக உள்வாங்கிக் கொண்டு கச்சிதமாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அரசு அதிகாரிக்கே உரிய தோற்றத்தில் அவரைப் பார்க்க முடியும்.

“நாயகி கியாரா அத்வானி போன்ற அழகான, திறமையான நடிகை, ராம்சரணுடன் இணையும்போது அருமையான இணை அமைந்து விடுகிறது. இருவரும் நடித்துள்ள பாடல் காட்சிகளை நாள் முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று மனதில் தோன்றும்.

“ராம்சரணும் நானும் இணைந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போருக்கு இப்படத்தை திரையில் பார்க்கும்போது ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன,” என்று சங்கர் கூறியிருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகப்படுத்தி உள்ளது.

இப்படத்துக்கு தமன் இசை அமைக்க, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சுனில், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘இந்தியன் 2’ படம் வசூலில் பெரிதாகச் சாதிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்