தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நல்லவனுக்கு நல்லதுதான் நடக்கும் என்ற உண்மையைச் சொல்ல வரும் ‘சரண்டர்’

2 mins read
b03e8b2d-b732-463d-bfc2-790a26dad9e9
தர்ஷன். - படம்: ஊடகம்
multi-img1 of 3

நல்லவனுக்கு நல்லதுதான் நடக்கும் என்ற உண்மையைச் சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது ‘சரண்டர்’ படம். தேர்தல் பின்னணியில் நடக்கும் கதை.

தனது முதல் படம் என்பதால் நிறைய உழைப்பைக் கொட்டி கவனமாக படத்தை எடுத்திருப்பதாகச் சொல்கிறார் அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி. இயக்குநர் அறிவழகனின் சீடர். படத்தின் தலைப்பே சில விஷயங்களை ரசிகர்களுக்கு எடுத்து வைக்கும் என நம்புகிறாராம்.

தேர்தலுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பு கதை தொடங்கும். காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தேர்தலுடன் தொடர்புள்ள ஒரு முக்கியமான பொருள் காணாமல் போகிறது. அந்தக் காவல் நிலையத்தின் எழுத்தரான லால் மீது பழி விழுகிறது. அவர் இன்னும் ஆறு மாதங்களில் பணி ஓய்வு பெறப்போகிறார்.

“அவருக்கும் காணாமல்போன பொருளுக்கும் சம்பந்தமே இருக்காது. அந்தக் காவல் நிலையத்தின் பயிற்சி ஆய்வாளர் தர்ஷன், ஒரு கட்டத்தில் உண்மையைக் கண்டுபிடிப்பதற்கான பொறுப்பை ஏற்கிறார்.

“இன்னொரு பக்கம் சுஜித் சங்கர், தேர்தலில் போட்டியிட்டு தன் ரவுடி அந்தஸ்தை மாற்றிக்கொள்ள நினைக்கிறார். எல்லாத் தொகுதிக்கும் பணத்தை விநியோகிக்க வேண்டிய பொறுப்பு அவருக்குத் தரப்படுகிறது. அதில் கொஞ்சம் பணமும் காணாமல் போகிறது.

“அதனால் தர்ஷன், சுஜித் இருவரும் சந்தித்துக்கொள்ள, அந்தத் தொலைந்துபோன பொருள் கிடைத்ததா, மறைந்துவிட்ட பணம் திரும்ப வந்ததா என்பதே இப்படத்தின் கதை.

“காவல்துறை சம்பந்தப்பட்ட கதை என்றால் வழக்கமான காட்சிகள் சில இடம்பெறும். ஆனால் அவற்றை இந்தப் படத்தில் பார்க்க இயலாது. இது முழுக்க முழுக்க எதார்த்தமான படைப்பு.

“காவல்துறையினரும் மனிதர்கள்தான். அவர்கள் பணிபுரிகிற இடம், ஒரு குற்றம் நடந்ததைப் பார்க்கும்போது அவர்களின் மனநிலை என்ன, அழுத்தம் வரும்போது என்ன செய்வார்கள் என அவர்களுடைய தனிப்பட்ட, பணிசார்ந்த நடைமுறையைத் திரையில் காண்பித்துள்ளேன்,” என்கிறார் கௌதமன் கணபதி.

‘பிக்பாஸ்’ தர்ஷன்தான் கதாநாயகன். காவல்துறை அகாமிக்குச் சென்று இரண்டு வாரங்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டாராம்.

“ஒரு நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்கிற உத்வேகம் அவரிடம் இயல்பாகவே இருக்கிறது. அதே போல் நடிகர் லால் நடிப்பிலும் அனுபவத்திலும் கொடி நாட்டியவர். கதையைக் கேட்டதும் அதில் தாமாக அக்கறையுடன் இணைந்துகொண்டார்.

“முனிஸ்காந்த், ‘ஹார்ட் பீட்ஸ்’ தொடரில் நடித்த பாடினி குமார், செம்மலர் அன்னம் போன்றவர்களும் உயிரோட்டமாக இணைந்துள்ளனர். மன்சூர் அலிகான் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

“இதில் தர்ஷனுக்கு ஜோடி கிடையாது. தேர்தல் பின்னணியில் ஐந்து நாள் அவகாசத்தில் படத்தின் கதை விரைவாக நகர்வதில் காதல் அம்சங்கள், பாடல்களுக்கு அவசியம் இல்லாமல் போனது.

“சில சமயம் நமக்கு பெரிய பிரச்சினை ஏற்படும். அந்த நேரத்தில் அது பெரும் துயரமாக இருக்கும். அடுத்த கட்டத்தில் அதுவே நம் வாழ்க்கைக்கு பெரும் திருப்பமாக அமையும். அதையும் இந்தப் படத்தில் காட்சிப்படுத்தி உள்ளோம்,” என்கிறார் அறிமுக இயக்குநர் கௌதமன் கணபதி.

குறிப்புச் சொற்கள்