சூர்யா, ஜோதிகா தம்பதியரின் மகள் தியாவும் திரை நட்சத்திரமாக ஜொலிக்க உள்ளார். அதற்கு முன்னோட்டமாக, ‘லீடிங் லைட்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார் தியா.
இந்தித் திரையுலகில் பணியாற்றும் ‘லைட் வுமன்’கள் எனப்படும் பெண் ஊழியர்கள் குறித்து இந்தக் குறும்படத்தில் அலசப்பட்டுள்ளது.
அந்தப் பெண்களின் பணி அனுபவங்கள், அவர்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் ஆகியவற்றை இக்குறும்படம் விவரிக்கிறது.
ஒளி தரும் கலைஞர்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அவர்களின் வலிமையைப் பற்றிப் பேசுகிறது இக்குறும்படம் என்கிறார் தியா. இதை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
குறும்படம் முழுமையாகத் தயாரான கையோடு, உலகெங்கும் அதைத் திரையிட பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளார் சூர்யா. இதன் காரணமாக, பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை அள்ளிக் குவித்து வருகிறது அந்தப் படம்.
ஆஸ்கர் தகுதிக்காக லாஸ் ஏஞ்சலிஸ், கலிஃபோர்னியாவின் ரீஜென்சி திரையரங்கில் ‘லீடிங் லைட்’ குறும்படம் தற்போது திரையிடப்பட்டுள்ளது.
சூர்யாவும் ஜோதிகாவும் இந்திப் பட உலகில் நல்ல வாய்ப்புகளைப் பெற்று தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் கனவுடன் மும்பையில் குடியேறினர். ஆனால், ஜோதிகாவுக்கு எதிர்பார்த்த அளவுக்குப் படங்கள் அமையவில்லை.
சூர்யா நடித்த தமிழ்ப் படங்களின் இந்திப் பதிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், மும்பைக்கு குடிபெயர்ந்த வாய்ப்பை இவர்கள் மகள் தியா நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டுள்ளார்.