சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வழக்கம்போல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யாவின் 45வது படமாக உருவாகும் ‘ரெட்ரோ’வை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார்.
கடந்த நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வரும் இந்தப் படம், மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க, யோகி பாபு, நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ் என மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘லப்பர் பந்து’ சுவாசிகாவும் ‘நெடுஞ்சாலை’ ஷிவதாவும் குறிப்பிடத்தக்க வேடங்களில் திரையில் தோன்றுவார்களாம்.
மலையாளத்தில் நல்ல கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடிப்பவர் இந்திரன்ஸ். இதற்கு முன்பு தமிழில் சங்கர் இயக்கிய ‘நண்பன்’ படத்தில் நடித்த இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கோடம்பாக்கம் திரும்பியுள்ளார்.
‘ரெட்ரோ’வுக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்பது இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள படப்பிடிப்புத்தளம் ஒன்றில் பிரம்மாண்டமான திருவிழா காட்சியைப் படமாக்கி வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதில் சூர்யாவும் திரிஷாவும் நடனமாடும் ஒரு பாடல் காட்சி, திருவிழாப் பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது.
“நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் ஆடிப்பாடும் இந்தப் பாடல் காட்சி ரசிகர்களை நிச்சயம் கவரும். கிராமிய மணம் கமழும், மண் வாசனையுடன் கூடிய பாடலாக இதற்கு மெட்டமைத்துள்ளார் சாய் அபயங்கர்.
“ஐந்து நாள்கள் நடந்த படப்பிடிப்பின்போது, முழுப் பாடலும் எடுக்கப்பட்டது. தற்போது மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்று ‘ரெட்ரோ’ படக்குழுவினர் கூறுகின்றனர்.
‘லப்பர் பந்து’ படத்தில் சுவாசிகாவின் கதாபாத்திரம் பேசப்பட்டதுபோல, இதிலும் அவரது பாத்திரம் ரசிகர்களால் சிலாகிக்கப்படும் என்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இவரும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.
ஏப்ரல் மாதத்தோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து, படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிடுமாம்.
‘ரெட்ரோ’ படத்தை முடித்துவிட்டு, ஓரிரு வாரங்கள் ஓய்வெடுத்த பின்னர் தனது 46வது படத்தில் நடிக்கத் தயாராகிறார் சூர்யா.
‘லக்கி பாஸ்கர்’ வெற்றிப் படத்தைத் தந்த வெங்கி அட்லூரி இயக்கும் சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, சூர்யா, ஜோதிகா தம்பதியர் மும்பையில் உள்ள வீட்டில், தங்களுக்கு நெருக்கமான திரையுலக நண்பர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் ஜோதிகா.
குறிப்பாக, திரிஷாவுடன் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தின் கீழே, ‘காலம்தான் எவ்வளவு வேகமாக கடந்து செல்கிறது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விருந்து நிகழ்வில் நடிகைகள் ராதிகா, ரம்யா கிருஷ்ணன், நடன அமைப்பாளர் பிருந்தா, நிகழ்ச்சித் தொகுப்பாளர் டிடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அனைவரும் ‘டப்பா கார்டல்’ இணையத் தொடரில் ஜோதிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகப் பாராட்டியதைக் கேட்டு அவர் பூரித்துப்போனாராம்.