தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரு நாள்களில் 4,000 ரசிகர்களைச் சந்தித்தார் சூர்யா

1 mins read
56975a51-9f20-451d-bbf1-f75ea9a6b360
‘ரெட்ரோ’ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே. - படம்: ஊடகம்

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாள்களில் தமது ரசிகர்களைச் சந்தித்து சூர்யா உரையாடி வருகிறார். தமது ரசிகர் மன்றத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து அவற்றை வழிநடத்தி வரும் அவர், இம்முறை மாவட்ட வாரியாக 4 ஆயிரம் ரசிகர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

போரூரில் உள்ள சக்தி பேலசில் நடந்த அச்சந்திப்பில் 70 மாவட்டங்களில் இயங்கும் சூர்யா ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு நடந்த சந்திப்பில், இனி ஆண்டுக்குக் கண்டிப்பாக இரு படங்கள் நடிப்பேன் எனச் சூர்யா கூறியதாகத் தெரிகிறது.

ஆனால் இம்முறை நடைபெற்ற கூட்டத்தில் அப்படி எதுவும் பேசவில்லை என்றும் ரசிகர்களிடம் அன்பாக நலம் விசாரித்ததுடன் மன்றத்தின் நிறை குறைகளைக் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு ரசிகருடனும் தனித்தனியாகப் பொறுமைகாத்து புன்னகையுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது போன்ற சந்திப்புகளை நிகழ்த்தி விஜய்யைப் போன்று அரசியலில் நுழையத் தமது ரசிகர் மன்றத்தைச் சூர்யா பலப்படுத்துகிறாரோ என்ற சந்தேகத்தைக் கோடம்பாக்க வட்டாரங்கள் எழுப்புகின்றன.

இதற்கிடையே, சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்திலிருந்து ‘கண்ணாடிப்பூவே’, ‘கனிமா’ பாடலைத் தொடர்ந்து ‘தி ஒன்’ பாடல் வெளியாகியுள்ளது.

அப்படத்தின் இசை வெளியீட்டு விழா இவ்வாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்