சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி நடித்த படம் ‘பீனிக்ஸ்’. அண்மையில் வெளியான அப்படம் பலதரப்பட்ட விமர்சனங்களைப் பெற்றது. அப்படத்தின் வெளியீட்டு நேரத்தில் சூர்யா சேதுபதி பேசிய சில காணொளிகள் சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டன.
இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களைக் கையாள்வது குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் பேசியிருந்தார்.
“அனைத்துத் துறைகளிலும் எதிர்மறையான விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. அதை நம்மால் தடுக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் இதை எதிர்கொள்கின்றனர்,” என்றார் அவர்.
மேலும், “அவற்றை எப்படி சமாளிப்பது என்பது குறித்து நாம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்மறை விமர்சனங்கள் நமது மனத்தைப் பாதிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும். நான் ஏதாவது தவறு செய்தாலும், அதை எப்படி சரிசெய்வது என யோசிப்பேன். ‘ஏன் இப்படி செய்தேன்?’ என நினைத்து என்னைக் காயப்படுத்திக்கொள்ள மாட்டேன்,” என அவர் கூறினார்.
‘பீனிக்ஸ்’ படத்தைப் பலர் பாராட்டியதாகவும் அப்படக்குழுவின் உழைப்பிற்கு மக்கள் நேர்மறையாகப் பதிலளித்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்ததாகவும் சூர்யா சேதுபதி தெரிவித்தார்.
“அந்தப் பாராட்டுதான் எங்கள் உழைப்புக்குக் கிடைத்த பலன். பல பொழுதுபோக்கு திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். பார்வையாளர்கள் திரையரங்கில் செலவிடும் இரண்டரை மணி நேரம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையானவற்றைச் செய்ய விரும்புகிறேன். வேறு மொழிகளைக் கற்று, அந்தத் திரைப்படத் துறைகளில் பணியாற்றி, என் குரலிலேயே பின்னணி குரல் கொடுக்க விரும்புகிறேன்,” என அவர் கூறியிருக்கிறார்.