இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சூர்யா மீதான வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் கௌதம் மேனன் நடிகர் மம்முட்டியை வைத்து இயக்கிய ‘டோமினிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ்’ திரைப்படம் வரும் ஜனவரி 23ஆம் தேதி வெளியாகிறது.
இதில், துப்பறியும் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்துள்ளார்.
இப்படத்தின் விளம்பரப் பணிகளில் கௌதம் மேனன் கலந்துகொண்டு படம் குறித்தும் தன் திரை அனுபவங்கள் குறித்தும் பேசி வருகிறார்.
அப்படி, நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற கௌதம் மேனன், “துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யாதான். ஆனால், அவர் படத்தில் இடம்பெறவில்லை. ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ என அவருக்குப் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தும் சூர்யா ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இணையாதது பெரிய வருத்தத்தைக் கொடுத்தது.
“அப்படத்தில் அவர் நடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? சூர்யாவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறைந்திருக்குமா? அதெல்லாம் கண்டிப்பாக இல்லை.
“ஆனாலும், அவர் முடியாது என சொன்னதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரிடமிருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை,” எனக் கூறியுள்ளார்.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘துருவ நட்சத்திரம்’ படத்தை 2018ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், “மதகஜராஜா படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. தாமதமாக வெளியாகும் படங்கள் கூட ரசிகர்களை வெகுவாகக் கவர்வது உத்வேகம் தருகிறது. துருவ நட்சத்திரம் திரைப்படமும் கண்டிப்பாக வெளியாகும். அந்தப் படம் இப்பொழுதும் போன வாரம் எடுக்கப்பட்ட படம்போல்தான் இருக்கிறது,” என்று தெரிவித்துள்ளார் கௌதம் மேனன்.