சூர்யா நடிப்பில் அடுத்த ஆண்டு மூன்று படங்கள் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கங்குவா’ படத்துக்குக் கடுமையாக பாடுபட்டு நடித்திருந்தார் சூர்யா. ஆனால், அப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் இனி குறுகிய காலத் தயாரிப்பாகச் சில படங்களில் நடிக்க முடிவு செய்திருந்தார் சூர்யா. அந்த வரிசையில் அடுத்த ஆண்டு அவருடைய நடிப்பில் மூன்று படங்கள் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஜனவரி 23ஆம் தேதி இப்படத்தினை வெளியிடலாம் என்று ட்ரீம் வாரியர் நிறுவனம் ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முழுமையடைந்துவிடும் என கூறப்படுகிறது.
இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழுவினர் முனைப்பு காட்டி வருகிறார்கள். இதன் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் அனைத்துமே விற்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் சூர்யா. இதனை சூர்யாவே தயாரிக்கவுள்ளார். இதில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
இப்படமும் குறுகிய கால தயாரிப்பாகவே உருவாகிறது. அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இப்படத்தினை வெளியிடலாம் என்ற ஆலோசனையில் இருக்கிறது படக்குழு.

