ரஜினி நடித்திருக்கும் ‘வேட்டையன்’ படத்திற்காக ‘கங்குவா’ படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாக நடிகர் சூர்யா நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
3டி முறையில் சரித்திரப் படமாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. அண்மையில் இந்தப் படத்தின் முதல் பாடலும் முன்னோட்டக் காட்சியும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘கங்குவா’ திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
கோவையில் நடைபெற்ற ‘மெய்யழகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, “தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறப்பான படத்தை கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் தங்களது உழைப்பை ‘கங்குவா’ படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.
மழை, வெயில் என்று பார்க்காமல் மலை உச்சி, கடலுக்குள்ளே கஷ்டப்பட்டு படப்பிடிப்பை நடத்தினோம். அந்த உழைப்பு வீண் போகாது என்று நம்புகிறேன். அதற்கான அன்பும் மரியாதையும் நிச்சயம் நீங்கள் கொடுப்பீர்கள்.
இந்நிலையில் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 170வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படமும் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது.
அதனால் ‘வேட்டையன்’ படத்திற்காக ‘கங்குவா’ படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்க இருக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
மூத்தவர், சினிமாவின் அடையாளம், 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவோட அடையாளமாக இருக்கிறவர் என்பதால் ரஜினிகாந்த் படத்திற்கு வழிவிடுவோம்.
சூப்பர் ஸ்டார் படம் வெளியாவதுதான் சரியாக இருக்கும். ‘கங்குவா’ ஒரு குழந்தை. அந்தக் குழந்தை வர்ற அன்றைக்குத்தான் அதற்கு பிறந்தநாள்.
அன்றைக்கு நீங்கள் பண்டிகையாக படத்தை கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ‘கங்குவா’ படத்தின் புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.
அவரைத் தொடர்ந்து வந்து பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “கங்குவா’ தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவே பெருமைப்படும் ஒரு படமாக உருவாகி இருக்கிறது. ரசிகர்களோடு ரசிகனாக நானும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். கண்டிப்பாக சீக்கிரம் நல்ல செய்தி வரும். அதுவரை காத்திருங்கள்!” என்று பேசினார்.