சூர்யாவின் ‘கருப்பு’ படம் வெற்றி: ஜோதிகா மகிழ்ச்சி

சூர்யாவின் ‘கருப்பு’ படம் வெற்றி: ஜோதிகா மகிழ்ச்சி

2 mins read
50944419-4e15-4ed9-a036-b4fcb0ecf91e
சூர்யா ‘கருப்பு’ படத்தின் இறுதிகட்டக் காட்சியில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். - படம்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படம் கடந்த மே 15ஆம் தேதி வெளியானது. இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா நடித்த ‘கருப்பு’ படம் மாபெரும் வசூல் வெற்றி பெற்றிருப்பதால் ஜோதிகாவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

“சூர்யா ‘கருப்பு’ படத்தின் இறுதிகட்டக் காட்சியில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். எங்களுக்குக் கிடைத்த இந்த அன்பினால் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறோம். இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. எங்கள் வீட்டில் ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது,” என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்.

‘சிங்கம் 2’ படத்துக்குப் பிறகு வசூல் ரீதியில் சூர்யாவுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி ‘கருப்பு’ என்று விநியோகஸ்தர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

வசூல் மழை

மே 21ஆம் தேதி நிலவரப்படி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சேர்த்து ரூ.207 கோடியை ஈட்டியுள்ளது ‘கருப்பு’ திரைப்படம்.

கடந்த சில நாள்களாகத் தமிழகத் திரையரங்குகளில் ‘கருப்பு’ படத்தைக் காணக் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறை நாள்களுக்கு வந்தக் கூட்டம் வார நாள்களிலும் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால் ‘கருப்பு’ ரூ.300 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் மலையாளம், தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் இவ்வாண்டின் அதிகம் வசூல் தந்த படங்களில் இடம்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

வழக்கு தள்ளுபடி

இந்நிலையில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் ‘கருப்பு’ படத்துக்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “ படத்தில் இந்திய நீதித்துறையையும், நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து, அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

“நீதிபதி கதாபாத்திரம் லஞ்ச நடவடிக்கைகளில் ஈடுபடுவது போலவும், மது அருந்துவது போலவும், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படத்தைத் தொடர்ந்து திரையிட அனுமதித்தாலோ, ஓ.டி.டி. தளங்களில் வெளியிட அனுமதித்தாலோ நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்க நேரிடும். எனவே, இந்தப் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமணன் ஆகியோர், “படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் வரம்புக்குள் வருகிறது. இந்தப் படத்தைத் தடை செய்ய இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்