நடிகர் சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்தின் படப்பிடிப்பு அனுமதி இல்லாமல் நடத்தப்பட்டதால் அதிகாரிகள் படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்தினர்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 45’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார். 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூர்யா-திரிஷா இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கேளம்பாக்கம் - வண்டலூர் சாலையில் உள்ள வெளிச்சை கிராமத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முறையான அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக படப்பிடிப்புக்கான கனரக வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டிருந்ததால் அப்பகுதி மக்களுக்கும் படக்குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததில், உரிய அனுமதி இல்லாமல் படப்பிடிப்பை நடத்துவது தெரியவந்தது.
இதையடுத்து படப்பிடிப்பு நடத்த தடை விதித்த அதிகாரிகள், உரிய அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்துமாறு ஆர்.ஜே.பாலாஜி, சூர்யாவுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து படப்பிடிப்புக் குழுவினர் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
விறுவிறுப்புடன் படப்பிடிப்புப் பணிகளை முடித்து, இந்த ஆண்டின் இறுதியில் ‘சூர்யா 45’ படத்தை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் படத்தின் இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.