தென்னிந்தியாவில் சிரஞ்சீவி, ராம் சரண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் சொந்தமாக விமானம் வைத்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் முன்னதாக நயன்தாரா, ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் தனி விமானம் வைத்திருக்கும் நிலையில், தற்போது அந்தப் பட்டியலில் சூர்யாவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் சூர்யா, சொந்தமாக தனியார் ஜெட் விமானம் ஒன்றை வாங்கியுள்ளார் என்றும் ‘டஸ்ஸால்ட் ஃபால்கன் 2000’ எனும் அந்த விமானத்தின் விலை 120 கோடி ரூபாய் என்றும் தகவல் பரவியது.
விமானத்தில் நவீன தொழில்நுட்பம், பல்வேறு வசதிகள், உயர் பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்று உள்ளதாகவும் காணொளித் தகவல்களும் குறிப்பிட்டன.
இந்நிலையில், விமானம் வாங்கியுள்ளதாகப் பரவும் தகவலில் உண்மையில்லை என சூர்யா தரப்பைச் சார்ந்தோர் விளக்கம் அளித்துள்ளனர்.
சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள ‘கங்குவா’ படம் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
வரலாற்றுக் கதையம்சத்துடன் கூடிய இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து உள்ளார். சூர்யாவுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார்.
அத்துடன், சூர்யாவின் தயாரிப்பில் இரு படங்களும் உருவாகி வருகின்றன. அவற்றுள் ‘மெய்யழகன்’ படத்தில் சூர்யாவின் சகோதரர் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதைத்தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில் தயாராகி வரும் மற்றொரு படத்தில் அவரே நாயகனாக நடிக்கிறார். ‘சூர்யா 44’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சூர்யாவின் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.