சூர்யாவின் ‘கங்குவா’ படமும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்திருக்கும் ‘பீனிக்ஸ்’ படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் சூர்யா. இவர் தற்போது, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
3டி தொழில்நுட்பத்தில் வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் எட்டு மொழிகளில் வெளியாக உள்ளது.
சூர்யாவிற்காக ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் ‘கங்குவா’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசுகையில், “கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஃபிரெஞ்சு, ஸ்பானிஷ் என மொத்தம் எட்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
“அத்தனை மொழிகளிலும் சூர்யாவின் குரல் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டு வருகின்றன.
“வட மாநிலங்களில் மட்டும் இப்படம் 3,500 திரையரங்குகளில் வெளியாகும். வெளிநாடுகளில் பெரும் சாதனை படைக்கும்.
“ஒவ்வொரு நாட்டிலும் படத்தை வெளியிடுவதற்கும் விளம்பரம் செய்வதற்கும் அந்தந்த நாட்டின் திரை அனுபவம் கொண்ட ஒருவரைத் தேர்வு செய்துள்ளோம். இந்தியாவில் இப்படத்திற்கு மிகப் பிரம்மாண்டமாக விளம்பரங்கள் செய்யப்பட இருக்கின்றன.
“முந்தைய முன்னோட்டக் காட்சியில் சூர்யாவின் வரலாற்றுக் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில் அடுத்து வரும் முன்னோட்டக் காட்சியில் சூர்யாவின் மற்றொரு வேடத்தின் காட்சிகள் வெளியாகும்.
தொடர்புடைய செய்திகள்
“படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் 3Dக்கு மாற்றப்பட இருக்கிறது.
“கங்குவா’ திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகுமா என்று பலரும் கேட்கின்றனர். படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகாது.
“கங்குவா’ திரைப்படத்தை ஒரு மிகப்பெரிய பான் இந்தியா வெற்றிப்படமாக மாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் படக்குழு எடுத்து வருகிறது.
“கடந்த இரண்டு ஆண்டுகளாக சூர்யாவின் படத்தைத் திரையரங்குகளில் பார்க்காமல் காத்துக் கிடந்த ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான அனுபவமாக இப்படம் இருக்கும் என நம்பலாம்,” என்று கூறினார்.
தமிழ்நாடு விநியோக உரிமையை அபி & அபி பிக்சர்ஸ் அபினாஷ் இளங்கோவன் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ படமும் அதே தேதியில் வெளியாக உள்ளது.
புதிதாக நாயகனாக அறிமுகமாகும்போதே நட்சத்திர நடிகருடன் மோதுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாகி திரையரங்குகளில் மோத உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.